சிங்களம், கருநடம், தெலுங்கம், துளு என்னும் நாடுகளின் பகுதி ஆசிரியர் காலத்துத் தமிழகமாகவே இருந்தமை பாயிரத்தாற் புலப்படுதலின் அவற்றைப்பிற மொழிச் சொற்களாகக் கருதல் முரணாகத் தோன்றுகின்றது. |
பன்னிரு நிலம் தமிழகத்தின் பகுதிகளே என்பதையும் திசைச்சொல் என்பவை தமிழே என்பதையும் ஓராமல், புட்பகம், சாவகம் முதலிய பிற மொழிக்குரிய அயல்நாடுகளைப் பன்னிரு நிலத்தொடு சேர்த்தும், சேர்க்காமலும் நச்சினார்க்கினியரும் தெய்வச்சிலையாரும் எண்ணிக் கணக்கிட்டுள்ளனர். |
இனி ஒரு மொழியைச் செம்மொழி என்றும் கொடுமொழி என்றும் வகுத்தல் உலகில் வேறு எம்மொழியிலும் காணப்பெறாத விபரீதமாகும். செம்மை என்பதற்குச் சிறப்பென்னும் பொருள் காணாமலும் எதிர்கால விளைவுகளை நோக்காமலும் உரையாளரும் பின்னூலாரும் இக்கொடுமையைக் கையாண்டமையான், செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாய தமிழகம் கொடுந்தமிழ் நிலமெனலாயிற்று. அப்பகுதி வாழும் தமிழ் மக்கள் கொடுந்தமிழ் மக்களாயினர். சமய போதகராக வந்த வீரமாமுனிவர் தம் கொள்கை பரப்புதல் வாயிலாகக் கொடுந்தமிழ் இலக்கண நூல் செய்துபோந்தார். உலகவழக்காகிய பேச்சு மொழியைக் கொடுந்தமிழ் என்பதினும் தமிழர்க்கு மானக்கேடு வேறில்லை. பின்னும் ஒருசாரார் பாண்டியநாட்டினைத் தமிழ் நிலம் என்றும், ஏனைய தமிழகப் பகுதியைத் தமிழ்திரி நிலமென்றும் கூறிச்சென்றனர். |
வடசொல் பற்றியதொரு சிறுகுறிப்பு |
குமரி முதல் இமயம் வரையிலான பாரததேயத்துள் வழங்கிய தொன்மொழிகள் வடபகுதியில் ஆரியமும் தென்பகுதியில் தமிழுமாம், அதனான் ஆரியத்தை வடமொழி என்று தமிழைத் தென்மொழி என்றும் வழங்குவர். ஆரியர்க்கும் தமிழர்க்கும் தெய்வக்கொள்கை கலையுணர்வு அரசியற் சூழல் முதலியவை காரணமாக இனக்கலப்பும் மொழிக் கலப்பும் வளர்ந்து வந்த நிலையில் பாரததேயம் முழுமைக்கும் பொதுவாக ஒரு மொழியைப் படைத்துக் கொள்ள முற்பட்டு இருதிறத்துப் பேரறிஞரானும் முயன்று உருவாக்கப்பட்டதே சமற்கிருதமொழி என்பது மொழியாய்வாளர் பலரின் ஒத்தகருத்தாகும். |
சமற்கிருதமொழி யாவர்க்கும் பொது என்னும் உணர்வு கொள்ள வேண்டித் திருந்திய ஆரியமும் தமிழுமேயன்றி |