களைத் தோற்றுவிக்க அணுக்கமாக நிற்கும் நிலையே பெயர்ப்பொருள் எய்தும் முதல்வேறுபாடாகும். அங்ஙனம் தோன்றி நிற்கும் பெயர்ப் பொருள் எய்தும் வினைகளுக்கு ஏற்பப் பிற வேறுபாடுகளை அடையும். அதனான் ஒரு பெயர் எழுவாயாகத் தோன்றும் நிலையே முதல் வேற்றுமை என்று கூறுகின்றது தொல்காப்பியம். அங்ஙனம் எழுவாயாய் நிற்கும் பொருள் விகாரமின்றி நிற்றலின் அதனை முதல் வேற்றுமை என்பர் நூலோர். முதல் வேற்றுமைக்குரிய குறியீடு 'பெயர்' என்பதாகும். |
எழுவாயாகத் தோன்றிய பெயர்வேற்றுமையானது காத்தல் ஒத்தல் ஊர்தல் முதலாய ஒருசார் வினைகட்கு உரியதாகும் நிலை இரண்டாம் வேற்றுமையாகும். இஃது ஐகாரவேற்றுமை எனக் குறியீடு பெறும். பொருளான் அதனைச் செயப்படுபொருள் வேற்றுமை என்ப. செயப்படுபொருளாதற்குக் கருவியாக வரும் நிலை மூன்றாம் வேற்றுமையாகும். அது பிறிது பொருளைத் தன்பாற் கொள்ளும் நிலை நான்காம் வேற்றுமையாகும். தன்னை அளவையாக வைத்துப் பிறிதொரு பொருளை உறழ்ந்து கூறற்குரித்தாய் நிற்கும் அந்நிலை ஐந்தாம் வேற்றுமையாகும். அஃது ஒருபொருளுக்கு உரிமையாக நிற்கும் நிலை ஆறாம் வேற்றுமையாகும். அப்பெயர் ஒன்றன் செயல் நிகழ்தற்கு இடமாகக் குறிக்கப்படும் நிலை ஏழாம் வேற்றுமையாகும். படர்க்கைப் பெயர்ப்பொருள் முன்னிலைப் பொருளாக மாறும் நிலை எட்டாம் வேற்றுமையாகும். |
பெயர்ப்பொருள் எய்தும் வேறுபாடுகள் யாவும் இவ் எட்டனுள் அடங்குமாறும் இவற்றுள் ஒன்றனைப் பிறிதொன்றனுள் அடக்க இயலாதவாறும் ஆய்ந்துணர்ந்து கொள்க. இடைக்கால ஆய்வாளர் சிலர் ஐந்தாம் வேற்றுமையை நீக்கிவிடலாம்; அதனை ஏழாவதனுள் அடக்கலாம் என்பர். அவரெல்லாரும் வேற்றுமை என்பதன் தத்துவத்தை ஓர்ந்துணர்ந்தாராகக் கருதுதற்கில்லை. மேலும் இவ்எட்டு வேற்றுமைகளும் வடநூலைப் பின்பற்றி அமைத்துகொள்ளப் பெற்றவை என்பார் ஒருசாரார். வடநூலார் கூறும் "விபத்தி" என்னும் கொள்கைக்கும் தமிழ் நூலார் கூறும் "வேற்றுமை" என்னும் கொள்கைக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை அவர் கருதினாரில்லை. இவைபற்றி இந்நூலுரையுள் ஒரு சிறிது விளக்கப்பட்டுள்ளது. விரிவான விளக்கம் தனிக்கட்டுரையுள் கண்டுகொள்க. |
இவ்வேற்றுமை மரபுகளை இவ் ஆசிரியர் எண்ணு முறையானும், உருபுகளின் பெயரானும், பொருளானும் குறியீடு செய்து மூன்று இயல்களான் விளங்க உணர்த்துகின்றார். ஆறாம்வேற்றுமை |