சிறப்புப் பெயராகச் சிறப்பு வினைகளாகத் திணைகாட்டி நிற்றலும் பால் காட்டி நிற்றலும் திணையொடு பழகிய அஃறிணை இயற்பெயர் உயர்திணை உணர்த்தி வருதலும் குறிப்புவினைச்சொற்கள் ஒரு காலத்தை உணரநிற்றலும் விரவு வினைகள் சார்பினான் ஒரு திணைக்குரியவாய்ப் பொருளுணர்த்தி நிற்றலும் விரைவு தெளிவு பற்றிக் காலம் பிறழ்ந்து நிற்பினும் வினைச்சொற்கள் உரிய காலத்தை உணர்த்தி நிற்றலும், மன், தில், கொன் முதலாகத் தத்தம் பொருளவாய் வரும் இடைச்சொற்கள் இடம் நோக்கி வேறு வேறு பொருள் உணரநிற்றலும் பலபொருள் உரிச்சொற்கள் சார்ந்த சொல்லான் ஒருபொருளை வரைந்துணரநிற்றலும், செய்யுள் விகாரமாய் அமைந்த சொற்கள் செம்பொருள் உணர்த்தி நிற்றலும் அன்மொழித்தொகை பொருளை வரைந்துணர்த்தலும், வாராமரபினவும் என்னாமரபினவும் பொருள் தெரியநிற்றலும், சொல்லெச்சமும் குறிப்பெச்சமும் இசையெச்சமுமாகி வரும் சொல்லும் சொற்றொடரும் வேண்டப்படும் பொருள் பயந்துநிற்றலும் பெயர்நிலைக்கிளவிகளும் திசைநிலைக்கிளவிகளும் தொன்னெறி மொழிவயின் ஆகிவருவனவும் மந்திரப் பொருள்வயின் ஆகிவருவனவும் பிறவும் கூறுவோன் குறித்தபொருளைப் பயந்து நிற்றலும் வினையெச்சம் வடிவு வேறுபட்டு நிற்பினும் உரிய பொருளைக் கொள்ள நிற்றலும் முன்னத்தான் பொருளுணரவரும் சொற்கள் அப்பொருள் பயந்து நிற்றலும், பொருளதிகாரத்துள் அஃறிணைப் பொருள்கள் கேட்குநபோலவும் கிளக்குநபோலவுமாகி வருவனவும், உள்ளுறையும், இறைச்சியுமாக வருவன திணைக்குரிய பொருளை வரைந்துணர்த்தலும் பிறவும் குறிப்பாற் பொருளுணர்த்துவனவேயாம். | வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பொருளுணர்த்துவன தனிச் சொல்லாயும், தொகை மொழியாயும் சொற்றொடராயும் அமைந்துநிற்கும். ஆகலின் அவை பற்றிய சிறு குறிப்புக்கள் பின்வருமாறு. | மொழி-சொல்-கிளவி : எழுத்தை அளவையாகக் கொண்டு வகுக்கப்பெறுவது மொழி. அது ஓரெழுத் தொருமொழி, ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி என எழுத்ததிகாரத்துள் உணர்த்தப்பெற்றது. அம்மொழிகளே நால்வகைச் சொல்லாகவரும். சொல் என்பது பொருள் பயக்கும் இலக்கணத்தை அளவையாகக் கொண்டு வகுக்கப்பெறுவது. அது பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனப் பெயரியலுள் ஓதப்பட்டது. இலக்கியநோக்கில் வகுக்கப்பெறுவது இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் பிறிதொருவகை. |
|
|