இவற்றுள் பெயர்ச்சொல் முதலிய நான்கன் அடிப்படையில் தொகை மொழி- தொகைச்சொல், சொற்றொடர் என்பவை அறிந்துணரப் பெறும். |
கிளவி என்பது பொருள்தரும் நிலையில் கிளக்கப்படுவனயாவுமாம். ஓர் எழுத்தினை மொழிப்படுத்துக்கூறினும் கிளவியாம். தனிச்சொல் முதல் சொற்றொடர்த்தொகுதி இறுதியாகக் கூறினும் கிளவியாம். |
தொகைச் சொல்: |
இரண்டு முதலாயச் சொற்கள் தம்முள் இணைந்துநின்று ஒரு பொருளைக் குறித்து நிற்பவை தொகைச் சொல்லாகும். தொகைச் சொற்கள் தம்முள் ஒன்றனை ஒன்று சிறப்பிக்காமல் (ஒன்றற்கு ஒன்று அடையாகாமல்) யாவும் நோக்குடைய ஒரு பொருளையே சிறப்பித்து வரும். தொகைச் சொல்லுள் தனிச் சொற்களேயன்றித் தொகை மொழிகளும் இணைந்து வரும். வரையறை இல்லை. தனிப்பெயராகவும், பெயரொடு வினைச்சொல் கலந்ததாகவும் வரும். |
தொகை மொழி: |
இரண்டு முதலாய சொற்கள் இணைந்து தொக்கு ஒருமொழி போல வரும். வரையறையுண்டு. உம்மைத்தொகையுள் சொற்கள் இரண்டும் இரண்டற்கு மேலும் அமைந்துவரும். ஏனையவை இரண்டே சொற்களான் வரும். இரண்டற்கு மேற்படின் ஒன்றனொடு ஒன்றைத் தொகுத்து இரண்டாகவே கொள்ளப்பெறும். தொகை மொழிகள் பெயராயே தொக்குவரும். உம்மைதொகை ஒழிந்த ஏனையவை ஒரு பொருளையே உணர்த்தும். |
ஏர் உழவன், நிலங்கடந்தான் இவை தொகைச்சொல். பான்மொழி, பொற்றொடி இவை தொகைமொழி. பிறவிளக்கங்களைப் பெயரியல், எச்சவியல் உரைகளுட் கண்டு கொள்க. |
தொகைமொழிகள் வேற்றுமைத்தொகை, உவமத்தொகை. வினைத் தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என ஆறு வகைப்படும். வடமொழியாளர் கூறும் சமாசன் பற்றிய கோட்பாடு வேறு. தமிழ்நூலார் கூறும் தொகைமொழி பற்றிய கோட்பாடு வேறு. அதனான் தொகையைச் சமாசனோடு ஒப்பிட்டு மயங்கற்க. |