இருபெயரொட்டாக வருங்கால் ஒருசொல் ஆகுபெயர்க்குரிய இலக்கணத்ததாயும் பிறிதொருசொல் ஆகுபெயர்ச் சொல்லிற்கு அடையாயும் வரும். ஒட்டிநிற்கும் இருபெயர்கள் தொகைமொழியாயும் வரும். தொகைச் சொல்லாயும் வரும். அறுபதம் (வண்டு) வகரக்கிளவி (எழுத்து) என்பவை தொகைச்சொல். மதிமுகம் (தலைமகள்) தாழ்குழல் (தலைவி) என்பவை தொகைமொழி. இவற்றுள் பதம், கிளவி, முகம், குழல் என்பவையே ஆகுபெயராகிப் பொருள்தரும். அவையே ஆகுபெயர்ப் பொருளோடு தொடர்புடையனவாய் நிற்கும். |
அன்மொழித்தொகை யாண்டும் இருசொல்லாயே தொக்குத் தொகைமொழியாய் ஒருசொல் நடைத்தாகிவரும். தொக்க இரு சொல்லின்கண்ணும் பொருள் நில்லாமல் பிறதொருசொற் பொருளைப்பயந்து நிற்கும். அது வேற்றுமைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகைகளுக் குரிய சொற்களின் அடிப்படையிற் பெரும்பான்மையாயும் ஆகுபெயராதற் கேலாத வினைத்தொகை, உவமத்தொகைக்குரிய சொற்களின் அடிப்படையிற் சிறுபான்மையுமாக அமைந்துவரும். பொற்றொடி, வெள்ளாடை, தகரஞாழல் எனவும் தேன்மொழி, பெய்வளை எனவும் வருவன அன்மொழித் தொகையாகும். மதிமுகம், தாழ்குழல் எனவருவன அடையடுத்த ஆகுபெயராகும். காரணம் முகம், குழல் என்பவை சினையாக நின்று உடையாளை உணர்த்துதலின் இவை, சினையிற் கூறும் முதலறி கிளவி என்னும் ஆகுபெயராம். |