ஆகுபெயராதற்கேலாமையான் உரையாசிரியன்மாரும் ஆய்வாளர் பலரும் பெரிதும் தடுமாற்றத்திற்காளாய்த் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் விளக்கந்தந்து மாணாக்கரை மயக்கத்துள் ஆழ்த்தியுள்ளனர். நன்கு ஆயுங்கால் பரிமேலழகர் கூறிய உரைக்குறிப்பின்படி பாடம் வேறு. அப்பாடத்திற்குரிய இலக்கணத்தைப் பிழையான பாடத்திற்கு ஏற்றிக் கூற அரசஞ் சண்முகனார் போன்ற பேரறிஞர் சிலர் முயன்று தொல்காப்பிய நெறியையே சிதைத்துள்ளனர். பரிமேலழகர் கொண்டபாடம், |
"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழல் |
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு" |
என்பதாகும். குழல் என்பது சினையிற் கூறும் முதலறிகிளவிபற்றி வந்த ஆகுபெயராகும். குழல் பிற உறுப்புப் போலாமையின் மாணாக்கர் ஐயங்கொள்வர் எனக்கருதிக் "கனங்குழல்" ஆகுபெயர் என்றார். கனங்குழல் என்பது அவர்கொண்ட பாடமென்பதனை அடுத்துவரும் "கணங்குழல் என்று பாடமோதிப் பலவாய் திரண்ட குழல்" என்று உரைப்பாரும் உளர் என்னும் தொடரால் அறியலாம். இற்றைக்கு உள்ளபாடம் "கணங்குழை என்று பாடமோதிப் பலவாய்த்திரண்ட குழை" என்றே உளது 'குழல்' என்பது ஏடெழுதினோரால் குழை எனப்பிழைபடலாயிற்று என்பதனைப் "பலவாய்த்திரண்ட" என்னும்தொடர் புலப்படுத்தி நிற்றலை அறியலாம். காதணியாகிய குழை பலவாகந் திரளுதற்கு எவ்வாற்றானும் இயையாமையறிக. குழை என்பதே பாடம் எனக்கொள்ளின் குழை என்பதற்குக் கூந்தல் (தலைமயிர்க்கற்றை) எனப்பொருள் கொள்ளல்வேண்டும். காதணி என்னும் பொருள் ஒவ்வாது. பிறவிளக்கங்களை இக்குறளுரைபற்றிய தனிக்கட்டுரையுட் கண்டு கொள்க. பரிமேலழகரை மறுத்தற்கஞ்சிய ஒரு சாரார் அன்மொழி மேல்வந்த ஆகுபெயர் என்றும் மற்றொரு சாரார் தொகையான் அன்மொழி என்றும் பெயரான் ஆகுபெயரென்றும் நூல்நெறிக்கு முரணாக அமைதி கூறிச் சென்றனர். |
சொற்றொடர்: |
சொற்றொடர் என்பது இரண்டும் இரண்டற்குமேலும் சொற்கள் பொருள்விளக்கந் தருதற்கேற்பத் தொடர்ந்து எழுவாயும் பயனிலையுமாக நிறைதற்கொத்து நிற்கும் சொற்களின் கூட்டமாம். அங்ஙனம் தொடருங்கால் அவை அல்வழியும் வேற்றுமை வழியுமாகிய பொருள் முறைமையோடு தொடரும். |