அவ் எச்சங்களைப் பத்துவகையாகப் பிரித்துணர்த்துகின்றது தொல் காப்பியம். ஒரு சொல் அல்லது சொற்றொடர் எச்சமாகி நிற்குங்கால் - பிறிது - ஒருசொல்லை - சொற்களை அவாவிநிற்பதும், கருத்துக்களை அவாவிநிற்பதும் என இருதிறத்தான் அவை எஞ்சிநிற்கும். பிரிநிலைஎச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசைஎச்சம், எதிர்மறைஎச்சம், உம்மைஎச்சம், எனவென்எச்சம், சொல்எச்சம் ஆயவை சொற்களை எச்சமாகக் கொண்டு முடிபவை. குறிப்பெச்சமும் இசையெச்சமும் கருத்துக்களை எச்சமாகக் கொண்டு விளக்குபவை. இவற்றின் இயல்புகளை எச்சவியலுரையுட் கண்டு கொள்க. வேர்ச்சொல் பற்றியும், முதனிலைச் சொல்பற்றியும் உரியியலுரையுள் கண்டுகொள்க. |