தொல்காப்பியம் |
சொல்லதிகாரம் - காண்டிகையுரை |
முகவுரை: |
தொல்லாசிரியர் நிறுத்தமுறையானே இரண்டாவதாகிய 'சொல்' இலக்கணம் பற்றிய மரபுகளை வரைந்துணர்த்தலின் இவ்வதிகாரம் சொல்லதிகாரம் எனப் பெயர் பெற்றது. |
இவ்வதிகாரத்துள் ஓரெழுத்தொருமொழி முதலாகத் தோன்றும் சொற்கள் இருதிணைப்பொருளையும் அவற்றின் இயக்கம் முதலாகிய தன்மைகளையும் சுட்டி அவை பெயர், வினை, இடை, உரி என நால்வகையாக ஆக்கம் பெற்று வருமாறும் அவற்றின் இலக்கணம் ஆமாறும் கூறுகின்றார். |
சொல்லானாகும் தொடர்கள் வழுவின்றி ஆக்கம் பெறுமாறும் பெயர்ச சொற்கள் வேற்றுமை எய்துமாறும் எண்வகை வேற்றுமைகளின் இயல்பும், நால்வகைச் சொற்களின் இயல்பும் அவை செய்யுட் சொல்லாக அமைந்து நிற்குமாறும் அவை தொகையுற்று வருமாறும், பொருள்கோளும் பத்துவகை எச்சமும், பிற மரபுகளும் இவ்வதிகாரத்துட் கூறப்பெறுதலின் சொல்லிலக்கணத்தைக் கிளவியாக்கம் முதல் எச்சவியல் ஈறாக ஒன்பது இயல்களாகப் பகுத்துக் கூறுகின்றார். சொல்லாவது எழுத்தானியன்று தன்னையுணர்த்தியும், வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பிறபொருளை உணர்த்தியும் வரும் என்பதனை மொழிமரபு சூ. 12, பெயரியல் சூ. 1,2,3 ஆயவற்றால் உணர்த்தினார். |
'சொல்' என்பதற்கு 'நாவால் ஒலிக்கப்பெறும் தொடரிசை' என்பது பொருள் (ச்=நா. ஒல்=ஒலி. ச்+ஒல்=சொல்) பேச்சு (பெய்+சு) என்பதும் அப்பொருளுடையதாம். இசை, அசை, ஓசை என்பவற்றுள்ளும் சகரம் நாவின் செயல் குறித்து நிற்றல் காண்க. |
மொழி, சொல், கிளவி என்பவை வெவ்வேறு சிறப்புப்பொருளுடையவை எனினும் யாப்பினுள் ஒரு பொருட் கிளவிபோல ஆளப்பெறும். அதிகாரம் என்பதன் பொருள் எழுத்ததிகாரத்துள் விளக்கப் பெற்றது. |
கிளவியாக்கம்: |
கிளவியாக்கம் என்பது மூன்றாம் வேற்றுமைத்தொகை. அஃது கிளவியான் ஆகும் ஆக்கம் எனவிரியும். ஈண்டு அஃது அன்மொழித் தொகையாய் ஆக்கம் பற்றிய மரபுகளைக் கூறும் இயலுக்குப் பெயராயிற்று. |