இச்சொல் சகரக்கிளவி, வகரக்கிளவி என எழுத்தையும் உரையசைக்கிளவி, மாரைக்கிளவி என அசையையும், பெயர் நிலைக்கிளவி, வினையெஞ்சுகிளவி எனச் சொல்லையும், இருநான்குகிளவி, தொல்லோர்கிளவி எனச் சொற்றொடரையும் குறித்து வரும். ஆதலின் ஈண்டு அது தனிமொழி, தொகைமொழி, தொடர்மொழிகட்குப் பொதுவாக நின்றது. |
யாதானும் ஒரு சொல்லை இருதிணை ஐம்பாலுள் ஒன்றற்குரியதாக ஆக்கிக்கொள்ளுதலும், செப்பும் வினாவுமாக வரும் தொடர்மொழிகளை வழுவின்றி ஆக்கிக்கொள்ளுதலும் ஈண்டு ஆக்கமாம். சொற்கள தொடருங்கால் பயனிலையும், தொகை நிலையும் எண்ணு நிலையுமாகத் தொடரும். அவை இயைபும் தகுதியுமாகக் தொடரின் வழாநிலையாம். இயைபின்றித் தொடரின் வழுவாம். இலக்கணவரையறையிற் சிறிது பிறழ்ந்துவரினும் சான்றோர் வழக்காய்ப் பொருள்உணர்ச்சி திரியாமல் மரபாகவருவனவற்றை வழாநிலையாக மேற்கொள்ளுதலும் ஆக்கமாம். |