26கிளவியாக்கம்

எடுத்துக்காட்டு:
  

நம்பி  வந்தான்,   நங்கைவந்தாள்  (மக்கட்சுட்டு) இவை  உயர்திணைச்
சொற்கள்.
  

குழந்தை  நகைத்தது, மழை பெய்தது, யானை சென்றது [அவரல] காற்று
வீசிற்று, உண்மை நன்று, சூர் தீண்டிற்று [பிற] இவை அஃறிணைச்சொற்கள்.
   

திணை  என்னும்  பலபொருளொருசொல் ஈண்டு மக்கள் தன்மையாகிய
ஒழுக்கத்தை உணர்த்திநின்றது. ஒழுக்கம் = ஒழுகலாறு.
    

மக்கட்சுட்டுடையார்  தமது   நாகரிகமும்  பண்பாடும்   காலந்தொறும்
வளர்தற்கேற்ற விதிமுறைகளை வகுத்து  அவற்றுள்  செறிவுற்று  ஒழுகலின்
அவ்வொழுகலாறு திணை எனப்பட்டது. திண்மை என்னும்  பண்புரிச்சொல்.
மையீறு கெட்டு உடைமைப் பொருள்தரும் ஐகாரம்  பெற்றுத் 'திணை' என
நின்றது. மண்ணும் மணலும் செறிவுற்றுநிற்றலின் நிலம் திணை எனப்பட்டது.
பண்புகளான்  செறிதலின் நற்குலம் திணை எனப்பட்டது. 'தெறுவ தம்மவித்
திணைப்பிறத் தல்லே'. [குறுந்-45]
   

மக்கட்   சுட்டுடையாரின்      அறிவாற்றலும்       ஒழுக்கமுறையும்
காலந்தொறும்  வளர்ந்து   வருதல்  கண்கூடாதலின் 'உயர்திணை' என்பது
வினைத்தொகையாம். அஃறிணை என்பது பண்புத்தொகை.
   

'என்மனார்'  என்பது மரூஉமுடிபு கொண்டதொரு முற்று வினைச்சொல்.
அஃது, என்னும்+அன்னார்-ஆகிய இருசொற்களின்  மரூஉவாம்,  'செய்யும்'
என்னும் முற்றுச்சொல் பல்லோர்  படர்க்கைக்கண்  வாராமையின், என்னும்
என்பது திரிந்து அன்னார் என்பதனொடு புணர்ந்து ஒருசொல் நீர்மைத்தாக
ஆக்கமுற்றது.  (என்ம்+அனார்-என்மனார்)  மக்கட்சுட்டென்பது மக்களாகிய
கருத்து  நிலைபெறும்  பொருள்மேல்  நின்றமையான்   இருபெயரொட்டுப்
பண்புத்தொகையடியாகப்பிறந்த    அன்மொழித்தொகை.  'மக்கள்'  என்றது
மக்கட்டன்மையாகிய  ஒழுக்கத்தை.  சுட்டென்பது   கருதி   உணரப்படும்
உணர்வை. மக்கள் உடம்புபெற்றிருப்பினும்  மக்கள்  எனக்கருதப்படாதவழி
அஃறிணை மருங்காகும். பண்பாடில்லாதாரை மரம் என்றும், விலங்கென்றும்,
கொடியாரைப்   பேய்    என்றும்   கூறும்     வழக்கினை    நோக்குக.
மக்களுடம்பினரல்லாத     வழியும்     மக்கட்   சுட்டுடையாராகக்கருதின்
உயர்திணையாம்.  அனுமன்  வந்தான்,  சாம்பவன் வந்தான். அசுவத்தாமன்
வந்தான்   என்னும் வழக்கினை  நோக்குக. இந்நுண்மையை ஓர்ந்துணர்தல்
வேண்டித்  தொல்லாசிரியர்  'மக்கள்' உயர்திணை  என்னாது  மக்கட்சுட்டு
எனத் தெரிந்தோதினர்.