'அவரலபிற' என்பது உம்மைத்தொகை. அவரல என்பது காட்சிப் பொருளையும், பிற என்பது கருத்துப் பொருளையும் குறிக்குமென்க. மன்சொல், 'மன்' என்பது நிலைபேற்றைக் குறித்து நின்றது. தம்மீறு திரிதலும் [இடை-3] என்பதனால், ஈறுதிரிந்து மன என நின்றது. சொல்லானது ஆகாயபூதத்தின் கூறாய் நாதவடிவாய்த் தோன்றி நிகழ்தலின் (நித்தியம்) அழிதலில்லை என்க. மன்னுதல்=நிலைபெறுதல், நிலைபேறில்லாத பொருளை மன்னாப் பொருள் [கிளவி-34] என்பார் ஆசிரியர். 'மன்சொல்' என்றது இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயராய் நின்றது. |
காலம் புணராத வழி எல்லாச் சொற்களும் பெயர் மருங்காய் நிகழ்தலின் எழுத்ததிகாரத்துள், |
உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்று |
ஆயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே |
(எழுத்-117) |
எனத்தோற்றுவாய் செய்து அச்சூத்திரத்தான் பொருள் வகை இரண்டே எனப் பெறப்பட வைத்தமையின் ஈண்டு அவற்றை விளக்கினார் என்க. இச்சூத்திரத்தாற் பொருளையும் வரையறுத்தார் எனக்கூறுவது நூல்நெறிக்கு ஏற்குமாறில்லை. இங்ஙனம் சொற்பொருளை விளக்கி இலக்கணங்கூறுதல் மரபு என்பதனை, |
"மீஎன மரீஇய இடம்வரை கிளவி" |
(எழுத்து-250) |
"பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் |
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி" |
(கிளவி-4) |
"அன்பொடு புணர்ந்த ஐந்திணை" |
(பொ- கள-1) |
"ஏது நுதலிய முதுமொழி" |
(செய்- 158) |
"ஆற்றலொடு புணர்ந்த ஆண்பால்" |
(மரபியல்-50) |
"முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றம்" |
(மரபியல்-112) |
என வருவனவற்றானறிக. |
பொருளையும் வரையறை செய்கின்றது இச்சூத்திரம் என வலிந்து கூறின் இதனை மூன்று சூத்திரமாகக் கொள்ளல்வேண்டும். பொருளின்றேல் சொற்களின் தோற்றமின்று. ஆதலின் சொல் ஆயிருதிணையின்கண் தோன்றி அவற்றை இசைக்கும் என்க. 'ஆயிருதிணையினை' என இரண்டாவது விரிப்பின் பொருளும் சொல்லும் வெவ்வேறாகத் தோன்றும் என்றும், சொற்கள் இடுகுறியாகக் கட்டிய வழக்கு என்றும் பட்டு மொழியியலுக்கும் அறிவியலுக்கும் முரணாகும். 'சொல்' தன்னையுணர்த்திப் பின் பொருளையும் அறிவிக்குமாறுபோல முதற்கண் சொல், பொருளை இடமாகக் கொண்டு தோன்றிப் பின்னர் அப்பொருளை அறிவிப்பது அதன் தன்மையாம். |