'ஆயிருதிணையின் இசைக்கும்' என்றது அவ்விருதிணையின் கண்ணும் தோன்றி இசைக்கும் என்றவாறு, 'தோன்றி' என்பது அவாய்நிலையான் கூட்டப்பட்டது. இசைக்கும் என்பது ஒலிக்கும் எனமுற்றாய் நின்றது. ஒலிக்கும் என்பது நிகழும் என்னும் பொருட்டு. |
எனவே, திணையிடமாக நிகழ்வதே சொல் என்பதும், அதனான் அதுவும் இருவகைப்பட்டது என்பதும் பெறப்படும். |
தோன்றும், நிகழும், வரும் என்றாற்போலக் கூறாமல் 'இசைக்கும்' என்றது செவிக்குப் புலனாகிப் பொருளுணர்த்தி நிற்பதே 'சொல்' என உணர்தற்கென்க. வரிவடிவ அடையாளங்களும், மெய்ப்பாடுகளும் பொருள் உணர்த்துவனவேனும் அவை சொல்லாகா என்க. |
"எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்" |
என்னும் பவணந்தியார் கூற்றுப் பாராட்டற்பாலதாம். |
இனி, அவர் திணை இலக்கணங் கூறுங்கால், "மக்கள் தேவர் நரகர் உணர்திணை" என்றார். அஃது உண்மைபோல நின்று மயக்குதலின் அதன் பொருந்தாமையைப் பின்வரும் கருத்துக்களான் ஓர்ந்துகொள்க. |
பவணந்திமுனிவர் மொழியிலக்கண மரபுகள் - கோட்பாடுகள், இவற்றினும் தம் சமயக் கோட்பாட்டினையே பெரிதும் மதிப்பவர் என்பதை எழுத்திலக்கணம் பற்றிக்கூறத் தொடங்குங்கால் (செவிப்புலனாம்) "அணுத்திரள் ஒலி" எழுத்து என்றார். அதனான் அவர் "மெய்தெரி வளியிசையை (தொல் - பிறப் - 20) மட்டும் உடன்பட்டு அகத்தெழுவளியி சையாகிய மந்திர எழுத்தை உடன்படாராயினமை தெளிவாகும். உரியியலுள் அறிவைப்பற்றிக் கூறுங்கால் "வானவர் மக்கள் நரகர் விலங்குபுள், ஆதிசெவி யறிவோ டையறிவுயிரே" எனப் புறப்பொறிக்குரிய புலன்களின் அடிப்படையில் மக்களை ஐயறிவுயிர் என்றார். அவரொடு வானவரையும் கூட்டிக் கூறினார். அதனான் அகக்கரணங்களான் தோன்றும் ஆறாவதறிவையும் உடையவர் மக்கள் என்பதும் அவ்வறிவே மக்கள் ஒழுகலாற்றிற்கு அடிப்படை என்பதும், அது காரணமாகவே தமிழ்நூலார் மக்களை உயர்திணையாகக் கொண்டார் என்பதும் அவர்க்கு உடன்பாடில்லை என்பது தேற்றமாம். எனவே அவர். |
"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே" |
"மக்கள் தாமே ஆறறி உயிரே" |
என்னும் தொல்காப்பிய மரபைப் புறக்கணித்துள்ளமை புலனாகும். |