கிளவியாக்கம்29

இனித்   தொல்காப்பியர் " தெய்வஞ்  சுட்டிய  பெயர்நிலைக்   கிளவி
உயர்திணை மருங்கின் பால்பிரிந்  திசைக்கும்"  என்றமையான்  வானவரை
உயர்திணையுள் அடக்கினார் என மயங்குவர் ஒருசாரார்.
   

ஆசிரியர்      தெய்வஞ்சுட்டிய     பெயர்நிலைக்       கிளவிகளை
உயர்திணைக்குரிய பால்களின்பாற் படுத்துக் கூறியதன்றி  உயர்திணைக்கண்
அடக்கினாரல்லர்.  பாலுண்ணும்  உரிமை பற்றித்  தாயில்லாக்  குழவிக்குச்
செவிலி   தாயாவாளோ?  மற்றும்  தெய்வம்  என்னும் கருத்தும் வானவர்
என்னும் கருத்தும் வேறுவேறாம்.
  

தெய்வம்  என்பது   உண்மைப்  பொருளாகிய   தத்துவங்களின்
உருவகமாகும்
. வானவர் என்பது கற்பனை.  அஃதாவது  இந்நில உலகமும்
அதன்கண்  வாழும்   உயிரினங்களும்  போல  வானுலகம்  என்று ஒன்று
இருப்பதாகவும்  ஆண்டு   வானவர்   முதலாகப்    பல   உயிரினங்கள்
இருப்பதாகவும் கருதிக்கொள்வது. நரகருக்கும் இவ்விளக்கம் ஒக்கும்.
   

இனி,  ஆசிரியர்   தெய்வம்   என்னாது   தெய்வஞ்சுட்டிய    பெயர்
நிலைக்கிளவி என்றது 'மக்கட்சுட்டு' என்றது போலத் தெய்வத்  தன்மையை
ஏற்றிக் கூறிய பொருளைக் குறிப்பதாகும். அத்தன்மையை  உருவகப்படுத்தி
வழங்கும் குறியீடே பெயர்நிலைக் கிளவியாகும்.
   

தத்துவ  நோக்கினான்    தெய்வச்சுட்டுடையவற்றை    ஆடூஉவாகவும்
மகடூஉவாகவும்   உருவகம்   செய்து   பெயர்   கொடுத்து வழங்குங்கால்
அவற்றிற்குப் பால்காட்டும்ஈறு  வகுக்கப்பெறாமையின்  உயர்திணைப்பாலுக்
குரிய ஈறுகளைப் பெற்று  இசைக்கும் என்றார்.  தெய்வச்சுட்டுப்  பெறாமல்
அத்தத்துவச் சொற்கள் வாளாகூறும்  வழி  அஃறிணை முடிபே கொள்ளும்
என்க. (கிளவி-58) இது பற்றிப் பின்னர்க் கூறப்படும்.
   

அஃதாவது  முருகென்பது   அழகின்  நிறைவுத்தன்மையைக்  குறிக்கும்
அஃறிணைச்  சொல். அது  முருகு  நன்று  என  முடியும். முருகு என்பது
நம்மை  வயப்படுத்திப்  பேருவகையளிப்பது  எனத்தத்துவமாக்கி  அதற்கு
ஆண்மைப்பண்பும்   தெய்விகத்    தன்மையும்  கொடுத்து 'முருகன்' என
அமைத்துக்   கொள்ளின்,   முருகன்  நன்று  எனற்கு இயையாது முருகன்
நல்லன் எனமுடியும். இவ்வாறே திருவளர்ந்தது என்பதைத்  திருமகளாக்கின்
திருமகள் வளர்ந்தாள் என முடியும்.
   

இங்ஙனமாகும்  மொழி    இயல்பினை   நோக்கித்   தெய்வஞ்சுட்டிய
பெயர்நிலைக் கிளவியும் இவ்வென அறியும்  அந்தந்தமக்கில,  'உயர்திணை
மருங்கின் பால்பிரிந் திசைக்கும்' என்றதன்றித்  தெய்வம் உயர்திணைக்கண்
அடங்கும் என்று கூறினாரல்லர்.