30கிளவியாக்கம்

அடுத்து,  இருள்சேர்ந்த   இன்னா  உலகமாகிய  தத்துவத்தை  நிரயம்
என்பது   தமிழ்வழக்கு.  நரகம்  என்பது ஆரியவழக்கு. நரகத்துள் பேயும்
பூதமும் அணங்கும் பிறவும் உள என்பார். அவை பேய்  விலகிற்று,  பூதம்
புடைத்தது, அணங்கு அணங்கிற்று என  அஃறிணையாக  இசைக்கப்படுதல்
தமிழ்வழக்கு. எனவே, வானவரும் (தேவர்) நரகரும்  உயர்திணை  என்பது
தமிழ்நெறி வழக்கன்மை தெளியப்படும்.
   

இனி  "மக்கள்  தாமே   ஆறறி உயிரே" என்றதன்றிப் 'பிறவும் உளவே
அக்கிளைப்  பிறப்பே"   என்று  ஆசிரியர்   கூறியுள்ளமையின்  வானவர்
முதலியோரை   உயர்திணையுள்  சார்த்திக்கூறுவதற்கு    இடமளிக்கின்றது
எனக்கோடும்     எனின்,  "பிறவும்   உளவே    அக்கிளைப்   பிறப்பே"
என்றாரேயன்றிப்   "பிறரும்    உளரே"   என   ஆசிரியர் கூறாமையான்
அங்ஙனம் கோடலாகாமையறிக.
    

இனி,   மக்கள்   உயிரும்  உடம்பும்   மக்கட் சுட்டாகிய பண்புகளும்
தனித்துக் கூறியவழி உயர்திணை பால்களாற் கூறற்கேலா என்பது பின்னர்க்
(கிளவி-57) கூறப்படும்.
   

சூ. 2 :

ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல் 

பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி 

அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே 

[2]
 

க-து :

உயர்திணைச் சொல்லின் பாகுபாடு கூறுகின்றது
 

உரை: ஆண்மகனை அறிவிக்கும் சொல்லும் பெண்மகளை அறிவிக்கும்
சொல்லும் அவர்தம் தொகுதியாகிய பல்லோரை  அறிவிக்கும்  சொல்லொடு
பொருந்தி அம்மூன்று கூறாய சொற்களும் உயர்திணையினவாகும்.
   

ஆடூஉவறிசொல்  முதலிய  மூன்றன்  கண்ணும்  ஐகார உருபு செய்யுள்
விகாரத்தான்   தொக்கது.   பல்லோரறியும்   சொல்   எனினும்   பலரறி
சொல்எனினும் ஒக்கும். அறிசொல் என்பது பிறவினைப்பொருட்டாய்க் கருவி
கருத்தாவாக  நின்றது.  ஆடூஉவறிசொல் மகடூஉ வறிசொல் பல்லோரறியுஞ்
சொல்லொடு  சிவணி  உயர்திணை  யவ்வே  எனவும் 'அம்முப் பாற்சொல்
உயர்திணை  யவ்வே'  எனவும்  கூட்டிமுடிக்க. 'பல்லோர்' என்பது ஆடூஉ
மகடூஉ ஆகிய தொகுதியன்றி வேறில்லை என்னும் நுண்மையை உணர்த்தப்
பல்லோரறியுஞ் சொல்லொடு சிவணி என்றார்.