சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

82

3.வேற்றுமை மயங்கியல்

இரண்டாவது ஏழாவதனொடு மயங்கல்
 

86.

கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்(கு)
உரிமையும் உடைத்தே கண்என் வேற்றுமை
 

என்பது சூத்திரம்.

இனி, இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், உருபும் பொருளும்
உடன்     மயங்குதலும்,     ஒருவழி     உருபே     மயங்குதலும்,
ஒன்றற்குரியதனோடு     ஒன்று     மயங்குதலும்,    இரண்டும்ஒத்து
மயங்குதலும்,  ஒரு பொருண்மை ஒன்றற்கே உரியதாகாது பலவற்றோடு
மயங்குதலும்,   ஒன்றனது  ஒரு  பொருளோடு  ஒன்று  மயங்குதலும்,
ஒன்றனது  பல  பொருளொடு  ஒன்று  மயங்குதலும்,  ஒன்றற்குரிமை
பூண்டு  எடுத்தோதின  பொருள்வழி மயங்குதலும், ஓதாதபொருள்வழி
மயங்குதலும்,   ஒன்று   தன்   மரபாய்   மயங்குதலும்,   இலக்கண
வழக்குள்வழி    மயங்குதலும்,    இலக்கணமில்வழி    மயங்குதலும்,
மயக்கவகையான்   மயங்குதலும்,   ஒன்றனோடு   பொருள்  முடிந்து
தொடர்ந்தடுக்கி   மயங்குதலும்,   ஒன்றனோடு   பொருண்  முடியாது
தொடர்ந்தடுக்கி  மயங்குதலும், தொகையுள் மயங்குதலும், தொகையில்
மயங்குதலும்,  உருபு  வேற்றுமையாய்  மயங்குதலும், உருபும் உருபும்
மயங்குதலும்,  என்றின்னோரன்ன  வேற்றுமை மயக்கம் பல கூறலின்
வேற்றுமைமயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று.

இச்சூத்திரம்     என்னுதலிற்றோ  எனின்,  நிறுத்த  முறையானே
இரண்டாவது,  அதிகாரத்தானே  நின்ற  ஏழாவதனோடும் மயங்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) கருமச்சார்ச்சியல்லாத சார்தல் என்னும் பொருண்மைக்கு
உரித்தாதலையுடைத்துக்   கண்  என்னும்   வாய்பாட்டதாகிய  ஏழாம்
வேற்றுமை, (எ -று.)

(எ - டு.) அரசரைச் சார்ந்தார், அரசர்கட் சார்ந்தார் எனவரும்.

கருமச்சார்ச்சிக்கண்  அசரர்கண் சார்ந்தார் எனின், அரசர் இடமாக,
சாரப்பட்டது  பிறிதாவான்  செல்லலின்  கருமமல்லாச்  சார்பு  என்று
ஓதப்பட்டது.                                             (1)

இதுவுமது
 

87.

சினை நிலைக் கிளவிக் கையும் கண்ணும்
வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர்.
 

என் -  எனின், இதுவும்  அவ்விரண்டன் மயக்கமே உணர்த்துதல்
நுதலிற்று.