என் - எனின், ஆறாவதனோடு ஏழாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஆறாவதனிடத்து வாழ்ச்சி யென்னும் உரிமைக்கு ஏழாவதும் ஆகும். யாண்டோ எனின், ஆண்டு அஃதுறைநிலத்துக்கண், (எ - று.) (எ - டு.) காட்டு யானை, காட்டதுயானை, காட்டின்கண் யானை என விரியும். உறை நிலத்தான என்றதனால் உறையா நில மாயக்கால் ஆறாவதன்கண் வந்ததாகாது ஏழாவதுதானே யாம் என்றவாறு. அஃது ஊருள் யானையாய்க் காட்டுள் மேய விட்டதனைக் காட்டு யானை யென்னும் வழிக் கொள்க.
1 இந்நூற்பாவிற்குப் பொருள் காணப்படவில்லை. 2 ‘தொகை வருகாலை’ என்பது இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச் சிலையார் ஆகியோரது பாடம். இவரது பாடமும் நச்சினார்க்கினயரது பாடமும் ஒன்றே. |