சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

90

மற்று    இஃது வாழ்ச்சியும் ஆறன் மருங்கின் வாழ்ச்சியாயினவாறு
என்னை ? அஃது யானைக்காடு என்பதன்றே; ஆண்டு யானையுட்காடு
என   ஆகாதால்   எனின்;   யானை   காட்டின்  கண்  வாழ்தலால்
உடைமையாயிற்றன்றே.  அதனால்  காட்டியானையென அக்காட்டிற்கு
யானையை   உறுப்பாகக்  கூறும்வழி  வாழ்தலடியாக  நின்றதாகலின்,
அதனையும் வாழ்ச்சிக் கிழமை யென்று கூறியவாறு போலும். அதனாற்
போலுமென்றது சிறுபான்மை, (எ - று.)                      (15)

கொடைப் பொருளில் நான்காவதும் ஆறாவதும்
மயங்கல்
 

101.

குத்தாக வரூஉம் கொடையெதிர் கிளவி
அப்பொருள் ஆறற் குரித்து மாகும்.
 

என் - எனின்,  நான்காவதன்பொருள் ஆறாவதன்கண் செல்லுமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) கு என்னும்  வாய்பாடு  தொக்கு  வருகின்ற கொடைத்
தொழிலினை  யேற்றுக்  கொண்டு  நின்ற  சொல் மயங்குமாறு கூறின்,
அப்பொருண்மை,  ஆறாவது உடைமைப் பொருளாதற்கு உரித்துமாம்,
(எ - று.)

(எ - டு.) நாகர்பலி  என்பது  நாகர்க்குப் பலி,  நாகரது பலி என
விரியும்.

கொடைக்கிளவி     என்னாது எதிர்கிளவி என்றதனான் இவ்வாறு
மயங்குவது  எதிர்கிளவி  அல்லாக்கால்  மயங்காது என்பது. எதிர்தல்
என்பது   விழுப்பமுடையாரை   நுதலியக்காற்   கொண்டு   வைத்து
விரும்பிக் கொடுப்பது.

மற்றிது     நிகழ்தலின்  மையின் நான்காவது ஆயவாறு என்னை
யெனின்,   நிகழ்ந்ததேயன்று   கொடை   நிகழ்கின்றது.  நிகழ்வதும்
பொருண்மை வகையாற் கொடையெனப்படும் என்பது.          (16)

அச்சப்பொருளில் ஐந்தாவதும் இரண்டாவதும்
மயங்கல்
 

102.

அச்சக் கிளவிக் கைந்தும் இரண்டும்
எச்சம் இலவே பொருள்வயி னான.

 

என் - எனின்,   ஐந்தாவதும்   இரண்டாவதும்    மயங்குமாறுது
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) அஞ்சுதல்   என்னும்   பொருண்மைக்கு  ஐந்தாவதும்,
இரண்டாவதும்  தம்மில்  ஒத்த  நிலைமையவாம்  பொருள்படுமிடத்து
என்றவாறு.