இவ்வுரையாசிரியரோ ‘நிலை’ என்பதற்குப் பெண்ணாகத்துப் பெருஞ் சங்கரனாரது நிலை என்றும், இஃது ஒன்றிய தற்கிழமை’ என்றும் உரைத்தனர். ஒன்றியதற்கிழமைக்கு இவ்வெடுத்துக்காட்டு மூலம் இவரைச் ‘சைவர்’ எனத்துணியின் இழுக்கில்லை. (4)காலம் :- இவர் தாம் உரைக்கும் உரைகளில் பல்வேறு இடங்களில் இளம்பூரணர் உரையைத் தழுவியும், பல்வேறு இடங்களில் நச்சினார்க்கினியர் உரையைத் தழுவியும் உரைக்கின்றார். இதனை யாம் விளக்கவுரையில் அவ்வந் நூற்பாக்களிலும் எடுத்துக் காட்டியுள்ளேம். ஆண்டுக் காண்க. ஆதலின், இவர் நச்சினார்க்கினியருக்குப் பிற்ப்பட்டவர் என நன்கு அறியலாம். அன்றியும் “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்ற திருக்குறளில் பரிமேலழகர் உரையில் ‘முற்கூறியதிற் பிற்கூறியது வலியுடைத் தாகலானும்’ என்ற தொடர் காணப்படுகிறது. அதனை இவ்வுரைகாரர் 159ஆம் நூற்பாவுரையில் அப்படியே எடுத்தாளுகின்றார். இதனை விளக்கவுரையிலும் எடுத்துக்காட்டியுள்ளேம். பரிமேலழகர் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். நச்சினார்க்கியர் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். எனவே இவர்களது காலத்திற்குப் பிற்பட்டவர் கல்லாடர் என்பதை நன்கறியலாம். சுப்பிரமணிய தீட்சதர் தாம் இயற்றிய ‘பிரயோக விவேகம்’ என்றும் நூலில்,22 ஆம் நூற்பாவில், “மக்கட் சுட்டு என்பதனைக் கல்லாடரும் பின் மொழியாகு பெயராய் நின்ற இருபெயரொட்டுப் பண்புத் தொகை என்பர்” என இவ்வுரையாசிரியரைக் குறிக்கின்றார். இவரது காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு ஆகும். ஆகவே இவரது காலத்திற்கும் முற்பட்டவர் என அறியலாம். எனவே இவரது காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டிற்கும் 17 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் என அறியலாம். எனினும் இவரது காலம் மிகப் பிந்தியது எனக் கூறுதற்கில்லை. ஆதலி்ன் இவர் கி.பி. 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டினர் ஆகலாம். தெய்வச்சிலையாரும், நச்சினார்க்கினியரை அடுத்து வாழ்ந்தவரே யாவர். எனினும் தெய்வச்சிலையாரும் கல்லாடரும் ஒருவர்க்கொருவர் பெயர் கூறி மறுத்தோ, அன்றித் தழுவியோ உரை செய்திலர். ஆதலின் அவ்விருவருள் முற்பட்டவர் யாவர் பிற்பட்டவர் யாவர்? எனத் தெரிதற்கில்லை. |