சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

99

காலத்தினையும்,      அதற்குத்    துணையாகிய   கருவியினையும்,
இன்னாற்கு  இவன்  என்று  சொல்லப்படுகின்ற அப்பொருளினையும்,
இவனை   ஏற்றுக்   கொண்டவதனால்  பயமாகச்  சொல்லப்படுகின்ற
அப்பொருண்மையினையும்  தொகை  செய்து  அவ்வெட்டும்  என்று
சொல்லும் ஆசிரியன், வினைச்சொல் பிறத்தற்கு இடமாகிய பொருளது
நிலைமையை, (எ - று.)

(எ - டு.) வனைந்தான்  என்பது.   இதனுள்  எட்டும் வந்தவாறு;
வனைந்தானென  வனைதல்  தொழின்மை  விளங்கிற்று. வனைந்தான்
என  ஒருவனும், வனையப்பட்ட குடம் முதலாய செயப்படுபொருளும்
விளங்கின.   வனைந்தோரிடம்  அகமானும்  புறமானும்  விளங்கிற்று.
கோலும்     திகிரியும்     முதலாய     கருவியும்     விளங்கிற்று.
வனைவித்துக்கொண்டானும்   விளங்கி,   வனைந்தான்  பெற்றதொரு
பயனும் மரபானும் பொருளானும் விளங்கிற்று. பிறவும் அன்ன.

வினையது      இலக்கணம் வினையியலுள் கூறற்பாலது. அதனை,
ஈண்டுக்  கூறியது  என்னை,  எனின்,  வேற்றுமைகளைப் பெயர்க்கே
உரிமைசெய்து கூறினமையின் வினையோடு என்றும் இயல்பில என்பது
பட்டு   நின்றமையின்  அவ்வினை  வருங்காலும்  வேற்றுமைகளோடு
வருவது என்பது அறிவித்தற்கு ஈண்டுக் கூறப்பட்டது.

கூறிய   எட்டிலக்கணங்களுள் வினை என்பது பொருட் குறிப்பால்
இரண்டாவதாய்ச்    சேர்ந்தது.   செய்வது   எழுவாயாச்   சேர்ந்தது.
செயப்படுபொருள்   இரண்டாவதாய்ச்  சேர்ந்தது.  நிலமும்  காலமும்
ஏழாவதாய்ச்  சேர்ந்தது. கருவி மூன்றாவதாய்ச் சேர்ந்தது. இன்னதற்கு
இது  பயனாக  என்னும்  இவ்விரண்டும்  நான்காவதாய்ச்  சேர்ந்தன.
இவ்வாறு  ஆறாவதும்,  விளியும்  ஒழிய  மற்றைய ஆறும் வந்தவாறு
கண்டுகொள்க.                                         (29)

மேலதற்கோர் புறனடை
 

115.

அவைதாம்,
வழங்கியல் மருங்கின் குன்றுவ குன்றும்
 

என் - எனின், மேலதற்கோர் புறனடையுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற் சொல்லப்பட்ட எண்வகை இலக்கணமும் வழக்கு
நடத்துமிடத்துக் குறைவன குறைந்துவரும், (எ - று.)

(எ - டு.)கொடி ஆடிற்று என்பது.

செயப்படுபொருளும்     இன்னார்க்கு  என்பதும்  இது  பயனாக
என்பதும்  இல்லை.  துஞ்சும்  என்புழியும்  குன்றின  உள.  பிறவும்
அன்ன.                                              (30)