(5)தொல்காப்பியத்திற்க உரை கண்டமை :- இவர் தொல் காப்பியத்தையும், அதற்குள்ள இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோரின் உரைகளையும் நன்றாகக் கற்றவர் ஆவர். அதனை இவர்தம் உரையால் நன்கறியலாம். இவர் தொல் காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார் எனத் தெரிகிறது. “ஒல்காப் பெருமைத் தொல்காப் பியத்திற்கு உரையிடை யிட்ட விரகர்கல் லாடர்” எனவரும் தொடரால் இதனை நன்கறியலாம். எனினும் இது பொழுது இவர் உரை சொல்லதிகாரத்திற்கு மட்டுமே காணப்படுகிறது. அதிலும் இடையியல் 13ஆம் நூற்பாவரையும் உளது. இதனினும் காலத்தால் முற்பட்ட உரைகளெல்லாம் இனிது இருக்கவும் இவ்வுரை மட்டும் இத்துணைச் சிதைந்துவிட்டமைக்குக் காரணம் தெரிந்திலது. இவ்வுரை முழுதும் கிடைத்தற்கியலாமல் போனது பெரிதும் வருந்தத்தக்கதாகும். இவ்வுரையைக் ‘கல்லாடனார் விருத்தியுரை’ எனவும் வழங்குவர். 5. உரை நலன் இவர்தம் உரை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளைத் தழுவிச்செல்வது ஆதலின், நடையும் அவர்தம் நடையையே ஒட்டிச் செல்கின்றது. அவர்கள் உரையைப் பல்வேறிடங்களுள் தழுவிச் செல்லினும், அவ்விருவர் தம் உரையிலும், சேனாவரையர் உரையிலும் காணப்படாத பல புதிய ஆய்வுரைகளும், விளக்கங்களும் இவர் உரையில் உள்ளன என்பதில் எத்துணையும் ஐயமின்று. அங்ஙனம் புதியனவாக உரைக்கும் உரைகளை மட்டும் ஈண்டுக் காட்டுதும். (அ) புதிய விளக்கங்கள்: (1) “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்னும் நூற்பாவில் ‘வழாஅல்’ என்பதன் சொல் முடிபினை விளக்குகின்றார்.அது வருமாறு :- “வழாஅல்’ என்பது, வழுவி யென்னுஞ் செய்தென் எச்சத்து எதிர்மறையாகிய வழாமல் என்னுஞ் சொல், குறைக்கும் வழிக் குறைத்தல் என்பதனால் இடைநின்ற மகரம் குறைந்து நின்றதெனவுணர்க.” (2) இந்நூற்பாவில் உற்றதுரைத்தல், உறுவது கூறல் என்று மட்டுமே பிறர்கூற, இவர் ‘உறுகின்றது கூறல்’ என்ற ஒன்றும் கூறி, அதுவும் உற்றதுரைத்தலுள் அடங்கும் என்றனர். |