இதுவும் ஆகுபெயர்க்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அவ்வாகுபெயர்களை ஐ முதலிய ஆறு வேற்றுமைப் பொருண்மையிடத்தினும் இயைபுடைமையைப் பாதுகாத்து அறியல் வேண்டும் ஆசிரியன், (எ - று.) (எ - டு.) பொற்றொடி ஆகுபெயர், பொற்றொடியைத் தொட்டான்: பொற்றொடியை என இரண்டாவதன் பொருண்மைத்து. தொல்காப்பியம் என்பது தொல்காப்பியனால் செய்யப்பட்டதென மூன்றாவதன் பொருண்மைத்து. தண்டூண் என்னும் ஆகுபெயர் தண்டூணாதற்குக் கிடந்தது என நான்காவதன்பொருண்மைத்து. பாவை என்னும் ஆகுபெயர் பாவையினும் அழகியாள் என ஐந்தாவதன் பொருண்மைத்து. கடு என்னும் ஆகுபெயர் கடுவினது காய் என ஆறாவதன் பொருண்மைத்து. குழிப்பாடி என்னும் ஆகுபெயர் குழிப்பாடியுள் தோன்றியது என ஏழாவதன் பொருண்மைத்து. பிறவும் அன்ன. இதனாற் சொல்லியது முன் ஒப்பில் வழியால் பிறிது பொருள் சுட்டலுமாம் என்றமையின் அப்பிறிது பொருள் சுட்டியவாறு பாகுபாடு பெறுங்கொல்லோ எனின், இவ்வாறு வேற்றுமைப்பொருள் உள்வழியே பெயராவது ; பிறவழி யாகாது என்று கூறியவாறு. (33) அளவும் நிறையும் ஆகுபெயர் எனல் |