இவ் வோத்து என்ன பெயர்த்தோ எனின், விளிமரபு என்னும் பெயர்த்து. மேலோத்தினோடு இவ் வோத்திடை இயைபு என்னோ எனின், மேல் “வேற்றுமை விளியோடு எட்டே” (சொல்-64) என நிறுத்தார் ; அந்நிறுத்த முறையானே விளியொழித்து அவ்வேழும் உணர்த்தி இனி ஒழிந்துநின்ற விளியை உணர்த்துகின்றார் என்பது. இம்முதற்சூத்திரம் என்னுதலிற்றோ எனின் விளி வேற்றுமையது பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று (எ - று.) (இ - ள்.) விளி என்று சொல்லப்படுவன தம்மை ஏற்கும் பெயரோடு யாப்புறத் தோன்றும் தன்மைய என்று சொல்லுவர் புலவர், (எ - று.) படுப எனப் பன்மை கூறிய அதனான், அவ்விளிதான் ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும், பிறிது வந்தடைதலும் இயல்பாதலும் என நான்கு வகைப்படும் என்பது பெறப்பட்டது. தெளிய என்றதனான் விளிதன்னை எழுவாயின் வேறுபாடதன்றி வேறோர் வேற்றுமை என்பாரும் உளர் என்பதூஉம், இவ்வாறு ஓர் வேற்றுமையாக நேர்ந்தார் என்பதூஉம் பெறப்பட்டது. (1) இஃது அப் பெயர்களைக் கூறுவல் எனல் |