சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

106

(எ - டு.)நம்பி - நம்பீ, நங்கை - நங்காய் எனவரும்.

இவை ஈறுதிரிதல்.                                       (4)

ஓகாரமும் உகரமும் விளியேற்குமாறு
 

125.

1ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்.
 

என்  -   எனின்,   ஒழிந்த   இரண்டு   ஈறும்   விளி  ஏற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஓகார   ஈற்றுப்   பெயரும்  உகர    ஈற்றுப்  பெயரும்
ஏகாரத்தோடு பொருந்தி விளியேற்கும், (எ - று.)

(எ- டு.) கோ  -  கோவே   எனவும்,  வேந்து  - வேந்தே எனவும்
வரும்.

இவை பிறிது வந்தடைதல்.                                 (5)

மேற்கூறிய உகரம்குற்றிய லுகரமெனல்
 

126.

உகரந் தானே குற்றிய லுகரம்.
 

என் - எனின்,  ஐயமறுத்தல்  நுதலிற்று ; என்னை 2மேல் இ உ  ஐ
ஓ  என்புழி  இன்ன உகரம் என்று  தெரிந்துக்  கூறாமையானும்,  உடன்
ஓதப்  பட்ட  எழுத்துக்கள்  முற்று   இயல்பினவாதலும், இன்ன  உகரம்
என்பது அறியாது ஐயுற்றான் ஐயந்தீர்த்தமையின் என்பது.

(இ - ள்.) மேற்  கூறப்பட்ட  உகரந்தான்  முற்றி யலுகரம் அன்று ;
குற்றயிலுகரமாம், (எ - று.)                                   (6)

ஏனைய உயிர் உயர்திணையில் விளியேலா எனல்
 

127.

ஏனை உயிரே உயர்திணை மருங்கில்
தாம்விளி கொள்ளா என்மனார் புலவர்.
 

என் - எனின்,  வேண்டாகூறி  வேண்டியது முடித்தலை உணர்த்தல்
நுதலிற்று.


1. இதனையும்  அடுத்த நூற்பாவையும் இணைத்து ஓரே நூற்பாவாகக்
கொள்வர் தெய்வச்சிலையார்.

2.விளிமரபு 3 ஆம் நூற்பா.