சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

108

என் - எனின்,  மேற்சிறப்புவிதி   குத்தலை   நுதலிற்று ;  முறைப்
பெயரிடத்து  ஐகாரவீறு  ஆயாய் விளியுருபேற்று வருதலே அன்றி ‘ஆ’
வாயும் விளியேற்கின்றமையின்.

(இ - ள்.) முறைப்   பெயரிடத்து   ஐ  என்னும்  ஈறு   ஆயொடு
வருதலேயன்றி ஆவொடு வருதற்கு உரியனவும் உள, (எ - று.)

(எ - டு.) அன்னை  -  அன்னா  என்றும்,  அத்தை  -  அத்தா
என்றும் வரும்.

உம்மை எதிர்மறை. அதனால் ஆவாதலே பெரும்பான்மைத்து.

மற்றிவை    விரவுப்   பெயர்களை   உயர்திணைப்  பெயர்களோடு
மாட்டெறியும்  ஆதலானும்   அம்மாட்டேற்றிற்கு   ஏற்ப உயர்திணைப்
பெயர்களுள்   இவ்வாறு   விளியேற்பன   இன்மையானும்   ஆண்டுக்
கூறற்பாலதனை ஈண்டுக் கூறியது எனக் கொள்க.                 (9)

அண்மைவிளி இயல்பாதல்
 

130.

அண்மைச் சொல்லே இயற்கை யாகும்.
 

என் -  எனின்,  எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.
மேற்கூறியவாறன்றி இன்னுழி இயல்பாம் என்கின்றமையின்.

(இ - ள்.)  மேற்கூறிய  உயிரீறு  நான்கினையுமுடைய அணியாரைக்
கூவும் சொற்கள் மேற் கூறியவாறன்றி இயல்பாய் விளியேற்கும், (எ-று.)

(எ - டு.) நம்பி  வாழி,  நங்கை  வாழி,  வேந்து  வாழி, கோ வாழி
எனவரும்.                                               (10)

உயர்திணையில் விளியேற்கும் புள்ளியீறுகள்
 

131.

னரலள என்னும் அந்நான் கென்ப
புள்ளி இறுதி விளிகொள் பெயரே.
 

என் - எனின்,  உயர்திணைக்கண்  உயிரீறு   விளியேற்பன  இவை
என்பது    உணர்த்தி    இனி   இவ்வுயர்திணைக்கண்   புள்ளி   ஈறு
விளியேற்பன இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)ன ர ல ள என்று  சொல்லப்பட்ட அந்  நான்கு  ஈற்றுப்
பெயரும்   என்று  சொல்லுப   ஆசிரியன்,  புள்ளியீற்றினை   உடைய
விளித்தலைக்கொள்ளும் உயர்திணைப் பெயராவன, (எ - று.)