(3) இயற்பெயரும், சுட்டுப் பெயரும் ஒருங்கு வரும்வழி இயற்பெயரின் பின்னரேயே சுட்டுப் பெயரைச் சொல்ல வேண்டும் என்றும், இது வழக்கிற்குப் பொருந்தும் என்றும், செய்யுளாயின் சுட்டுப்பெயர் முற்கிளக்கவும்படும் என்றும் கூறினர் தொல்காப்பியர். இதனை 38, 39 ஆம் நூற்பாக்களால் அறியலாம். செய்யுளின் சுட்டுப்பெயராயின் முற்கிளக்கவும்படும் என்பதற்குப் பிறஉரையாசிரியர்கள் எல்லாம் எடுத்துக்காட்டுக் காட்டி விளக்கினர். இருவரும் அவ்வெடுத்துக்காட்டினையே கூறினர். எனினும் இவ்வுரையாசிரியர் மட்டுமே இங்ஙனம் செய்யுளாயின் முற்கூறினும் அமையும் என்றற்குக் காரணம் என்ன என்பதை ஆய்ந்து எழுதுகின்றார். அது வருமாறு:- “இதனாற் சொல்லியது முற்கூறலாகாது எனப்பட்ட சுட்டுப்பெயர் மொழிமாற்றியும் பொருள் கொள்ளும் நயம் செய்யுட்கண் உண்மையான் அதனகத்தாயின் அமையும் என்று நேர்ந்தவாறாயிற்று.” இக் கருத்துப் பெரிதும் பாராட்டுதற்குரியதாகும். (4) வேற்றுமை மயங்கியலுள் கூறிய கருத்துக்களை ஒருங்கு தொகுத்துக் கூறும் சிறப்புப் பிறர் உரையில் காணாததாகும். இது வருமாறு :- இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், உருபும் பொருளும் உடன் மயங்குதலும், ஒருவழி உருபே மயங்குதலும், ஒன்றற்குரியதனோடு ஒன்று மயங்குதலும், இரண்டு ஒத்து மயங்குதலும், ஒரு பொருண்மை ஒன்றற்கே உரியதாகாது பலவற்றோடு மயங்குதலும், ஓர் உருபு ஓர் உருபோடு மயங்குதலும், ஓர் உருபு பல உருபோடு மயங்குதலும் ஒன்றனது ஒருபொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றனது பல பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றற்குரிமை பூண்டு எடுத்தோதின பொருள்வழி மயங்குதலும், ஓதாத பொருள்வழி மயங்குதலும், ஒன்று தன் மரபாய் மயங்குதலும், இலக்கணமில்வழி மயங்குதலும், மயக்க வகையான் மயங்குதலும், சொல்லுதல் வகையான் மயங்குதலும், ஒன்றனோடு பொருள் முடிந்து தொடர்ந்தடுக்கி மயங்குதலும், ஒன்றனோடு பொருள் முடியாது தொடர்ந்தடுக்கி மயங்குதலும், தொகையுள் மயங்குதலும், தொகையில் மயங்குதலும், உருபு வேற்றுமையாய் மயங்குதலும், உருபும் உருபும் மயங்குதலும், என்று இன்னோரன்ன வேற்றுமை மயக்கம் பல கூறலின் “வேற்றுமைமயங்கியல்” என்னும் பெயர்த்தாயிற்று. (5) நான்கு சொற்கும் உரிய பொது இலக்கணத்தைக் கிளவியாக்கத்தில் கூறி, அடுத்து வேற்றுமை இயலில் பெயரது |