என் - எனின் இதுவும் உயர்திணைப்பெயருள் விளியேலாதன கூறுதல் நுதலிற்று. (இ - ள்.)த, ந, நு, எ என்று சால்லப்பட்ட அவ்வெழுத்துக்களை முதலாகவுடையவாகிய, ஓர் தொடர்ச்சித் தன்மையைக் குறித்த ன, ள, ர என்னும் ஈற்றெழுத்தினையுடைய பெயர்களும் அத்தன்மையான பிறபெயர்களுமாயுள்ள பெயராகிய நிலைமையையுடையசொற்கள்வரின், மேல் விளியேற்கும் எனப்பட்ட பெயரொடு விளிகோடல் இல்லாமையை வேண்டும் ஆசிரியர், (எ - று.) (எ - டு.)தமன், தமள், தமர்; நமன், நமள், நமர்; நுமன், நுமள், நுமர்; எமன், எமள், எமர்; எனவும், பிறவும் என்றதனான், மற்றையான், மற்றையாள், மற்றையார் ; பிறன், பிறள், பிறர் ; எனவும் வரும். இவற்றை உயர்திணைப் பெயர்களோடு கூறாது ஈண்டுக் கூறியது என்னை எனின், இவை ஓரினத்துட்பட்டு இயைந்து வருதலான் ஈண்டுப் போதந்து உடன் கூறினார் எனக்கொள்க. (37) விளிமரபு முற்றும். |