என்பது சூத்திரம். இவ்வோத்து என்னை பெயர்த்தோ வெனின் பெரியலக்கணம் உணர்த்தினமையின் பெயரியல் என்னும் பெயர்த்து. மேலோத்தினோடு இதற்கியைபு என்னோ எனின் பெயரிலக்கணம் உணர்த்தி அவ்விலக்கணமுடைய அவ்வியற்பெயர் இவை யென் றவற்றது பகுதி யுணர்த்திய எடுத்துக்கொண்டார் என்பது. இனி, இம்முதற்சூத்திரம் என்னுதலிற்றோ எனின் நான்கு வகைப்பட்ட சொல்லிற்கும் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தமிழ்ச் சொல்லெல்லாம் ஒரு பொருள் உணர்த்து தலைக் கருதியே நடக்கும்; பொருளுணர்த்துதலைக் கருதாது நடப்பன இல்லை, (எ - று.) (எ - டு.) சாத்தன், கொற்றன் என அவ்வப்பெயர்கள் அவ்வப் பொருள்களை உணர்த்தின. உண்டான் தின்றான் என அவ்வவ் வினைச் சொற்கள் அவ்வவ் வினையை உணர்த்தின. அதுமன் உறுகால் எனவும், சென்மதி தவச்சேய்நாட்டார் எனவும் வருமிவை அவ் விடையும் உரியும் அவ்வவ் பெயர்வினைகளை யெடுத்து நின்று ஒரு பொருளை உணர்த்தின. மற்று, இஃது “ஆயிரு திணையின் இசைக்குமன சொல்” (சொல் - 1) என்புழி அடங்கிற்றுப் பிற எனின், ஆண்டு எல்லாச் சொல்லும் ஒருதலையாகப் பொருளுணர்த்தும் என்னும் துணிபு விதியின்மையின் ஈண்டுக் கூறினார் என்பது. மற்று அசைநிலை இடைச்சொற்கள் பொருள் உணர்த்தாவால் எனின், அவையும் ஒருவாற்றான் சிறுபான்மை பொருளுணர்த்துமென உணர்க. அல்லதூஉம் இது பெரும்பான்மையெனினும் அமையும் என்பது. முயற்கோடு என்னும் தொடக்கத்தன பொருள் உணர்த்தாவால் எனின், இவை நன்மக்கள் வழக்கின்கண் பொருண்மை திரிந்து முயற்கோடு இல்லை யெனப் பின்வருஞ் சொல்லோடு படுத்து நோக்க அவற்றது இன்மைவிளக்க வந்ததாம். இனி இறிஞி. மிறிஞி, என்னும் தொடக்தன பொருள் விளக்காவாலெனின், அவை நன்மக்களது வழக்கில் இன்மையின் ஈண்டு ஆராயப்படாது என்பது. (1) |