என் - எனின், இதுவும் அச்சொற்கள் பொருள் உணர்த்தும்வழிக் கிடந்தோர் இலக்கணம் உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) பொருள் தெரிய நிற்றலும் அப்பொருளை அறியப் படாது சொற்கள் தெரிய நிற்றலும் என்னும் இவையிரண்டும் சொற்கள் ஏதுவாக உளவாகும் என்று சொல்லுவர் புலவர் (எ - று.) பொருண்மை தெரிதற்கு உதாரணம் மேற் காட்டினவே, சொன்மை தெரிதற்கு உதாரணம் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், பெயரெச்சம், வினையெச்சம், முற்றுச்சொல் என. இவை அவ்வச் சொற்களையே பொருளாக உணர்த்தின எனக் கொள்க. மற்றிதும் பொருண்மை தெரிதலேயாம்பிற எனின் தாம் பொருண்மையுணர்த்தும்வழிச் சொல்லென வேறுபட்டு நிற்குமாகலின் இதனை வேறு கூறினார் என்பது. மற்று ஒருசொல் தன்னின் வேறாயதோர் சொல்லைப் பொருண்மையாக உணர்த்தாது வேறென்கிளவி யென்றாற்போல அச்சொல் தன்னையே உணரநிற்றலும் உண்டாமென்ன அதுவுஞ் சொன்மைதெரிதல் என அடங்கிற்றுப் போலும். மற்றும் மேல் எய்திய பொருண்மைதெரிதல் ஈண்டுக் கூறல் வேண்டா எனின் 1முற்கூறியதில் பிற்கூறியது வலியுடைந்து ஆகலின் அஃது விலக்குண்ணும் என உம்மை கொடுத்தாயினும் ஓதற்பாலாவதான நன்குணர்தற் பொருட்டு உடனோதினார் என உணர்க. (2) சொல் இருவகையால் பொருளுணர்த்தும் எனல் |