இலக்கணத்தைக் கூறவந்த ஆசிரியர், இயைபுபட்டமையான் வேற்றுமை இலக்கணத்தையும், அதனது மயக்கத்தையும், சிறப்பில்லா விளி வேற்றுமையையும், முறையே வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகிய மூன்று இயல்களிலும் கூறி, அடுத்துப் பெயர், வினை, இடை, உரி ஆகியவற்றின் இலக்கணங்களை அவ்வவ் வியல்களிலும், அவற்றுள் உணர்த்தப்படாது எஞ்சி நின்றனவற்றை எச்சவியலிலும் கூறியுள்ளார் என்பர் இளம்பூரணர். கல்லாடரும் இக்கருத்தினையே தழுவினும், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல். விளிமரபு ஆகிய மூன்று இயல்களும், வேற்றுமையிலக்கணம் கூறவந்தன என்பதை விலக்கி அவையும் பெயரது இலக்கணமே கூறவந்தன என விளக்குகின்றார். அவர் உரைக்குமாறு :- “மேலோத்தினோடு இவ்வோத்தியைபு என்னையோ எனின், மேல் ஓத்தினுள் நான்கு வகைப்பட்ட சொற்களையும் பொருள்கள் மேலாமாறு சொல்லிப் போந்தார். அவற்றுள் முதலது பெயர்ச் சொல் ; அதற்கு இலக்கணம் உணர்த்திய எடுத்துக் கொண்டார் என்பது. யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், எல்லாப் பெயர்களும் எழுவாயாகிப் பயனிலை கோடலும், ஒருவழி எழுவாயாகாது வேறோர் நிலைமையவாய் நிற்றலும், உருபேற்றலும், ஒருவழிச் சில பெயர் உருபேலாது நிற்றலும், காலந் தோன்றாமை நிற்றலும், ஒருவழித் தொழிற் பொருளொடு கூறியக்கால் காலந் தோற்றி நிற்றலும், விளியேற்று நிற்றலும், சில பெயர் விளியாது நிற்றலும், இன்னோரன்ன பிறவும் பெயரது இலக்கணமென உணர்த்தினார் என்பது.” இந்நுண்மை பாராட்டுதற் குரியதாகும். (ஆ) முறைவைப்புக் கூறுவதில் அருமை: இன்னும் இவர் முறைவைப்புக் கூறுவதில் மிகமிகச் சிறந்தவர் என்பதைப் பல்வேறு இடங்களில் அறியலாம். பிறர் கூறிய இடங்களில் இவரும் கூறி அவர்களினும் சிறப்புப் பெற்றதும் காணலாம்; பிறர் முறைவைப்பினைக் கூறாதொழிய இவர் மட்டுமே கூறிய இடங்களையும் ஆராய்வோம். (1) “அஆ வஎன வரூஉம் இறுதி அப்பால் மூன்றே பலவறி சொல்லே.” |