சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

122

இத்துணையுங்  கூறியன  நான்கு  சொல்லிற்கும்  பொதுவிலக்கணம் ;
மேற்கூறுகின்றது பெயரதிலக்கணம் என உணர்க.                 (5)

பெயரது இலக்கணம்
 

163.அவற்றுள்,
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன உரிமையும்

1அம்மூ உருபின தோன்ற லாறே.
 

என்  -  எனின்,  நிறுத்த முறையானே பெயர்ச் சொற்களது பெயரும்
முறையும் தொகையும் உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)   மேற்   சொல்லப்பட்ட    நான்கு     சொல்லுள்ளும்
பெயர்ச்சொல்லென்று     சொல்லப்படுவனவற்றை     ஆராயுங்காலத்து
உயர்திணைக்கு    உரிமையும்,     அவ்விரு     திணைக்கும்    ஒத்த
உரிமையுடையனவும்   என   அம்மூன்று   கூற்றன   அவை  தோன்று
நெறிக்கண், (எ - று.)

அப்பெயர் பெயர்  ;  அம்முறைமுறை  ; அத்தொகை தொகை  என
உணர்க.                                                  (6)

இதுவுமது
 

164.இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும்
உரியவை உரிய பெயர்வயி னான.
 

என் -  எனின்,  இதுவும்  பெயர்க்கண்ணே கிடந்ததோர் இலக்கணம்
உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)  இருதிணையினின்றும்  பிரிந்த    ஐம்பாற்  பொருட்கும்
ஒருபாற்குரிய   தொழில்கள்   ஏனைப்பாற்கும்  உரியவாம்.   இவ்வாறு
உரியவாவது  எச்சொல்லிடத்தோ  எனின்,   வினைச்சொல்லிடத்தாகாது
பெயர்ச் சொல்லிடத்தேயாம் (எ - று.)

நஞ்சுண்டான்   சாம்,   நஞ்சண்டாள்  சாம்,   நஞ்சுண்டார்  சாவர்,
நஞ்சுண்டது      சாம்,     நஞ்சண்டன    சாம்    என்பது.    மற்று
அவ்வாண்பான்மேற்   கூறற்குரிய   சாதலென்னும்வினை மற்றை நான்கு
பாற்கண்ணும்  தனித்தனி  கூறாமல்  சென்றதென  உணர்க.  உண்டான்
என்பதனைப் படுத்தலோசையாற் பெயராக்கிக் கொள்க.


1.‘அம்மூவுருவின’ என்பது நச்சினார்க்கினியர் பாடம்.