என்னும் நூற்பாவில், இவ் வீறுகளை இம் முறையே கூறுதற்குரிய காரணத்தைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் எவரும் ஆய்ந்திலர். இவ்வுரையாசிரியர் மட்டுமே இதனை விளக்குகின்றார். அது வருமாறு :- “அகரம் மூன்று காலமும் வினைக்குறிப்பும் கோடலின் முன் வைக்கப்பட்டது. ஆகாரம் எதிர்காலமாகிய ஒரு காலமே கோடலானும், எதிர்மறைவினைக்கண் அல்லது வாராமையானும் அதன்பின் வைக்கப்பட்டது. வகரமும் அகரமென அடங்குமேயெனினும் அவ் வகரம் போல மூன்று காலத்தும் வினைக்குறிப்பினும் வாராது உண்டல், தின்றல் இவை முதலாகிய தொழில் தொறும் உண்குவ, தின்குவ என எதிர்காலம் பற்றி வேறோர் வாய்பாட்டான் வருதலான் அவ்வகரத்தோடு அடங்கா நிலைமைச் சிறப்புடைய அகரத்தை முன்கூறி, இதனை அதன்பின் வைத்தார் என்பது.” (2) “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்.” இந் நூற்பாவில், செப்பு வினா ஆகிய இவற்றில், செப்பினை முற்கூறியதற்குரிய காரணத்தை நச்சினார்க்கினியரும், தெய்வச்சிலையாரும் கூறினும், இவர் கூறுவதே விரிந்ததும் முடிந்ததும் ஆகும். அது வருமாறு ;- “செப்பு முற்கூறிய காரணம், செப்பு, ஆசிரியன் கண்ணதாகலானும், வினாவினை யறிவிப்பது அதுவாகலானும், வினா இன்றியும் அது நிகழுமாகலானும், வழூஉப் பன்மை அதன் கண்ணது ஆகலானும் முற்கூறப்பட்டது.” (3) விரவு வினையின் பெயரும், முறையும், தொகையும் கூறும் நூற்பாவாகிய, “முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி இன்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யும் செய்த என்னும் அம்முறை நின்ற ஆயெண் கிளவியும்” (வினையியல் - 24) என்னும் நூற்பாவில் அவ் வெட்டுச் சொற்களும் அம்முறையே வைத்ததற்குரிய காரணத்தைச் சேனாவரையர் விளக்குவர். அம் முறைவைப்பினையே இவ்வுரையாசிரியர் தழுவியுரைப்பினும், இவர் கூறும் முறைவைப்பு அதனினும் சற்று விரிந்தும் சிறந்தும் உளதாதலை அவர் கூறும் முறைவைப்பினோடு, இவர் கூறும் முறைவைப்பினையும் ஒத்து நோக்குவார்க்கு நன்கு விளங்கும். (4) வினையெச்ச வாய்பாடுகள் கூறும், “செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி” (வினையியல் - 30) |