சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

134

என் - எனின்,     மேல்        விரித்தவற்றுள்      பெண்மைப்
பெயரெல்லாவற்றையும்     தொகுத்துத்    திணைக்கு    உரியவாமாறு
உணர்த்தல்  நுதலிற்று.  

(இ - ள்.)  மேல்  விரித்தோதினவற்றுள்   பெண்மையைக்  கருதின
எல்லாப்      பெயரும்      அஃறிணையுள்      பெண்ணொன்றற்கும்
உயர்திணையுள்  ஒருத்திக்கும்  நிற்றல்  பொருந்தின,  (எ - று.)  

பெண்மை சுட்டிய பெயர் பெண்மை இயற்பெயர் எனவும், பெண்மைச்
சினைப்பெயர்    எனவும்,   பெண்மைச்    சினைமுதற்பெயர்  எனவும்,
பெண்மை  முறைப்பெயர்  எனபும்  நான்கு வகைப்படும்.  

(இ - ள்.)  பெண்மையியற்பெயர் - சாத்தி வந்தது, சாத்தி வந்தாள்
எனவரும்.  

பெண்மைச் சினைப்பெயர் - முடத்தி  வந்தது, முடத்தி  வந்தாள்
எனவரும். குறளி என்பதும் அப்பாற்படும்.  

பெண்மைச் சினைமுதற்பெயர்  -  முடக்கொற்றி  வந்தது,  முடக்
கொற்றி வந்தாள் எனவரும்.  

பெண்மை முறைப்பெயர் - தாய் வந்தது, தாய் வந்தாள் எனவரும்,
ஆய் என்பதும் அது.  

யாய்    என்பதோ    எனின்,    தன்மையோடு    அடுத்தமையின்
முறைப்பெயரேனும் உயர்திணை எனப்படும்.                    (26)

ஆண்மை சுட்டிய பெயர்
 
  

184.

ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே,
 

என் - எனின்,  ஆண்மைப்பெயர்    எல்லாவற்றையும்  தொகுத்துத்
திணைக்குரியவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.  

(இ - ள்.) ஆண்மையைக் கருதின பெயர்களெல்லாம் அஃறிணையுள்
ஆண்  ஒன்றற்கும்  உயர்திணையுள்  ஒருவற்கும்  நிற்றல்  பொருந்தின,
(எ - று.)  

அவை   ஆண்மை  இயற்பெயர் எனவும், ஆண்மைச் சினைப்பெயர்
எனவும்,    ஆண்மைச்    சினைமுதற்   பெயர்   எனவும்,  ஆண்மை
முறைப்பெயர் எனவும் நான்கு வகைப்படும்.  

(எ - டு.)  ஆண்மையியற்பெயர் -  சாத்தன்  வந்தது,   சாத்தன்
வந்தான் என வரும்.  

ஆண்மைச் சினைப்பெயர் -  முடவன்  வந்தது, முடவன் வந்தான்
என வரும்.