சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

136

என் - எனின்,   ஒருமைப்பெயர்   எல்லாவற்றையும்   தொகுத்துத்
திணைக்குரியவாமாறுணர்த்தல் நுதலிற்று.  

(இ - ள்.) ஒருமையைக்  கருதின  எல்லாப் பெயரும் அஃறிணையுள்
ஒன்றற்கும் உயர்திணையுள் ஒருவற்கும் நிற்றல் பொருந்தின, (எ - று.)  

ஒருமைப்பெயர்  ஒருமை  யியற்பெயரும், ஒருமைச் சினைப்பெயரும்,
ஒருமைச் சினைமுதற் பெயரும் என மூன்று வகைப்படும்.  

(எ - டு.)ஒருமை யியற்பெயர்  -  கோதை   வந்தது,   வந்தான்,
வந்தாள் எனவரும்.  

ஒருமைச் சினைப்பெயர் - செவியிலி  வந்தது, வந்தான்,  வந்தாள்
எனவரும்.   

ஒருமைச்  சினை  முதற்பெயர்  -  கொடும்   புறமருதி  வந்தது,
வந்தான், வந்தாள் எனவரும்.                               (29)

தாம் என்னும் விரவுப்பெயர்
 
  

187.

தாமென் கிளவி பன்மைக் குரித்தே.
 

என் - எனின்,  தாம்  என்பது   திணைக்குரித்தாமாறு  உணர்த்தல்
நுதலிற்று.  

(இ - ள்.)தாம் என்பது இருதிணைப் பன்மைக்கும் உரித்து, (எ - று.)

(எ - டு.) தாம் வந்தார், தாம் வந்தன எனவரும்.  

வாளாது    பன்மை     என்றமையின்     ஆண்     பன்மையும்
பெண்பன்மையும் எனக் கொள்க.                            (30)

தான் என்னும் விரவுப்பெயர்
 
  

188.

தானென் கிளவி ஒருமைக் குரித்தே
 

என் - எனின்,   தான்   என்னும்   சொல்   திணைக்குரித்தாமாறு
உணர்த்தல் நுதலிற்று.  

(இ - ள்.) தான் என்னும்  சொல்  இருதிணை ஒருமைக்கும் உரித்து,
(எ - று.)  

(எ - டு.)   தான் வந்தது, தான் வந்தான், தான் வந்தாள் எனவரும். 

வாளாதே ஒருமை  என்றமையின்  பெண்பால்  மேலும்,  ஆண்பால்
மேலும் கொள்க.                                         (31)