என்னும் நூற்பாவில் அவ்வாய்பாடுகள் அம்முறையே வைத்தற்குரிய காரணத்தைப் பிற உரையாசிரியர்கள் எவரும் ஆய்ந்திலர். இவ்வுரையாசிரியர் மட்டும் தம் நுண்மாண் நுழைபுலத்தால் அதனைச் செவ்விதின் விளக்கியுள்ளனர். அது வருமாறு:- “செய்தென்பது முதலாகச் செய்தென என்பது ஈறாக அந்நான்கும் இறந்த காலத்தவாகலான் முன்னே உடன் வைக்கப்பட்டன. அவற்றுள் செய்து என்பது பெருவழக்கிற்றாகலின் அவற்றுள்ளும் முன் வைக்கப்பட்டது. அவற்றுள் செய்தென என்பது அவற்றிக்கு எல்லாம் சிறு வழக்கிற்று ஆதலானும், பிற வினையும் கோடலானும் பின் வைக்கப்பட்டது. இனிச் செய்யியர் என்பது முதலாகச் செயற்கு என்பது ஈறாக ஐந்தும் எதிர்காலத்த வாகலானும், பிற வினையுங் கோடல் உண்மையானும், பிறவினையுங் கோடலுடைய செய்தென வினையின் பின்னர் உடன் வைக்கப்பட்டன. அவ் வைந்தும் எதிர்காலத்தவேனும் செய்யியர் செய்யிய என்னும் இரண்டும் வாய்பாட்டு வேற்றுமையல்லது பொருள் வேற்றுமை இன்மையின் உடன் வைக்கப்பட்டது. செய என்பது எதிர்காலத்ததே யன்றிப் பிறகாலத்துஞ் சிறுபான்மை வருதலான் அதன்பின் வைக்கப்பட்டது. செயற்கு என்பது அவைபோல வழக்குப் பயிற்சி இன்மையின் எல்லாவற்றினும் பின் வைக்கப் பட்டது.” (5) 252 ஆம் நூற்பாவில், புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதந, வினை செயல் மருங்கின் காலமொடு வருந, வேற்றுமைப் பொருள்வயின், உருபாகுந ஆகிய இவற்றை முறையாகக் கூறாமைக்கும்; அசைநிலை, இசைநிறை, தத்தம் குறிப்பில் பொருள் செய்குந ஆகியவற்றில், தத்தம் குறிப்பில் பொருள் செய்குநவற்றை முற்கூறாது, அசை நிலை, இசை நிறைகளை முற்கூறியதற்கும் காரணம் என்னை ? என வினவிக் கொண்டு இவ்வுரையாசிரியர் ஆராய்வதும் பிறர் உரையில் காணாத பெருஞ்சிறப்புடையனவாகும். இவற்றுள் பின்னைய ஆய்வு உரைப்பகுதி சிதைந்துள்ளமையின் நன்கு விளங்கவில்லை. இன்னோரன்ன பெருஞ்சிறப்புகளை உடையதாய் இவ்வுரை விளங்கினும், ஒரு சாரார் இவ்வுரை அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பர். அங்ஙனம் கூறியதற்கு அவர்கள் காரணம் அல்லர். இவ்வுரை இதுகாறும் நன்கு பதிப்பிக்கப்பட்டு, வெளிவாராமையேயாகும். இனியேனும் இதன் உண்மை தெரிந்து மகிழ்வார்களாக. |