சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

150

மார் என்பது வினையொடு முடிதல்
 

210.

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப.
 

என் - எனின்,   இதுவும்  படர்க்கைக்கு   உரியது ஓர் ஈறும் அதன்
முடிபு வேற்றுமையும் கூறுதல் நுதலிற்று.  

(இ - ள்.) மார்  என்னும்   சொல்லை   ஈறாகவுடைய  சொல்லும்
பல்லோரை  உணர்த்தும்  படர்க்கைச்  சொல்லாம்.  அது   தான்  பிற
முற்றுச்  சொற்போற்  பெயரொடு.  முடியாது   காலத்தை   உணர்த்தும்
சொல்லாகிய     வினைச்     சொல்லோடு     முடியும்.    அவ்வாறு
முடிந்ததாயினும்  முற்றாம்  இயல்பில்  திரிபின்று   என்று  சொல்லுவர்
ஆசிரியர், (எ - று.)  

மார் எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும்.  

(இ - ள்.) ‘ஆர்த்தார்  கொண்மார்  வந்தார்’ என வரும். உண்மார்
தின்மார் என நிகழ்காலம் உண்டேலும் அறிக.  

இதுவும் வினையெச்ச    முற்றாய்     அடங்காதோ    எனின்,
மேற்கூறியவாறே கூறுக.  

உண்ணன்மார் என எதிர்காலம் உண்டேலும் அறிக.  

இனி     ‘நிலவன்மாரோ  புரவலர்’1  என்றும், ‘ பாடின் மன்னரைப்
பாடன்மார்  எமரே’ 2  என்றும்,   ‘நோய்மலி   வருத்தங்  காணன்மார்
எமரே’3  என்றும்,  பெயர்  கொண்டு   முடிந்தனவால்  எனின் அவை
நிலவுக,  பாடுக,  காண்க  எனவரும்  வியங்கோளிற்கு  எதிர்மறை.  

இதன்  மறை அல்ல என்று போகலும் ஒன்று. வினை கொள்ளும்
என்பது     பெரும்பான்மை.  சிறுபான்மை   பெயர்  வரும் என்பதும்
ஒன்று.  இரண்டனுள் நல்லது தெரிந்து உரைக்க.              (10)

உயர்திணை வினைமுற்றின் தொகை
   

211.பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அந்நா லைந்தும் மூன்று தலையிட்ட
முன்னுறக்
4கிளந்தன உயர்திணை யவ்வே.
 

என்     - எனின், விரித்துக் தொகுத்தல் என்னும்  இலக்கணத்தான்
இவை உயர்திணைக்கு உரிய எனத் தெரிநிலை வினையைத்   தொகுத்து
உணர்த்துதல் நுதலிற்று.  


1. புறம். 375 2. புறம்.375. 3. நற்றிணை 64.  

4.  ‘கிளந்த உயர்திணை’ என்பது  பிற  உறையாசிரியர்கள் கொண்ட
பாடம்.