சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

18

(இ) போலும் என்பது;

இவர்     பல  ஆய்வுகளை  எடுத்துக்  கொண்டு  ஆராய்கின்றார்.
அங்ஙனம் ஆராய்வுழி  நன்கு  துணிதற்கிய லாதனவற்றைப்  “போலும்”
என்றுரைப்பது  இவரது  பெருவழக்கமாகும். இங்ஙனம்  இவர் ஏறத்தாழ
40   இடங்களில்   கூறியுள்ளார்.   அவற்றுள்    சிலவற்றைக்   கீழே
தருகின்றாம்.

(1) “மக்கள்  என்னாது   சுட்டென்றது    தான்   உயர்திணையென
இடுகின்ற  குறியீட்டிற்குக் காரணம்  இதுவென்பது  விளக்கல் வேண்டிப்
போலும்,”                              (கிளவியாக்கம் - நூற்: 1)

(2) “முன்னும்   ஏதுவின் பாகுபாடு ஓதிவைத்துப்  பின்னும் ஏது என
ஓதியது   அவ்வாறொழிய   வருவனவற்றைக்   கருதிப்   போலும்.”
                                   (வேற்றுமையியல் - நூற்: 13)

(3) கிளவி     யென்றது ஆகுபெயராற்  பொருளினை  ஆக்கமொடு
புணர்ந்தென்று  விசேடித்துக்  கூறினமையின்  ஆக்கமல்லா  ஏது  ஒத்த
கிழமைத்தன்று என்பது  போலும் கருத்து.
                               (வேற்றுமை மயங்கியல் - நூற்: 9)

(4) “மற்று    இஃது ‘ஆனென் இறுதி இயற்கையாகும்’ என்ற வழியே
அடங்காதோ  எனின்,  அளபெடுத்த  ஆனென்  இறுதியாகலின்  வேறு
கூறிற்றுப் போலும்.”                        (விளிமரபு - நூற்: 18)

(5) “பிறவும்  என்றதனாற்  கொள்வன   யாவை  யெனின்,  குறவன்,
இறவுளன்,  குன்றுவன்  எனவும்;  காடன் காடி  எனவும்;  நாடன்  நாடி
எனவும்;   துறைவன்,   சேர்ப்பன்,    தரையன்,   திரையன்   எனவும்
ஒருமைத்திணைப்  பெயராய்  வருவனவும்,  ஆண்  பெண்  என்பனவும்
பிறவும் இன்னோரன்னவும்  போலும்.”         (பெயரியல் - நூற்: 20)

இங்ஙனமே   இவர் : 22, 48, 51, 56, 57, 67, 69, 75, 81, 83, 94, 95,
99, 100, 138, 159, 177, 216, 222, 224, 226, 231, 238, 244, 251, 252, 257
- என்ற நூற்பாக்களிலும் கூறிச் செல்லுதல் காண்க.

(ஈ) இரு கருத்துக்களைக் கூறி ஐயுறல் :

இவர்    சில கருத்துக்களை ஆராய்வுழி, இரு கருத்துக்களைத் தந்து
விட்டு, ‘இரண்டனுள் நல்லது தெரிந்து உரைக்க’  என்பதும்  உண்டு.
210  ஆம் நூற்பா உரை காண்க.