சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

154

உயர்திணைக் குறிப்பு வினை
 

216.

1அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும்
கண்ணென் வேற்றுமை நிலத்தினானும்
ஒப்பி னானும் பண்பி னானுமென்
றப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும்
அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும் குறிப்பே காலம்.
 

என் - எனின்,  நிறுத்த  முறையானே உயர்திணை தெரிநிலைிவினை
உணர்த்தி  அதன்   குறிப்புவினை   உணர்த்திய  எடுத்துக் கொண்டார்
என்பது.

(இ - ள்.)  ஆறாம்  வேற்றுமையது  உடைமைப்  பொருட் பெயர்க்
கண்ணும்   ஏழாம்   வேற்றுமையது   நிலப்பொருட்பெயர்க்  கண்ணும்,
உவமப்பொருட்பெயர்க்கண்ணும்,    கருமை   முதலிய  நிறப்   பண்புப்
பெயர்க்கண்ணும்     என்று    சொல்லப்பட்ட   அந்நான்கு   கூற்றுப்
பெயர்க்கண்ணும்    வருகின்ற    வினைச்சொல்,    வினைக்குறிப்பாய்த்
தோன்றும்;  அவையேயன்றி,  அன்மை  என்னும்  பண்புப் பெயரடியாக
வருவதும்,   இன்மை    என்னும்   பண்புப்   பெயரடியாக  வருவதும்,
உண்மை என்னும்  பண்புப்  பெயரடியாக  வருவதும், வன்மை  என்னும்
பண்புப்   பெயரடியாக   வருவதும்,   அத்தன்மை  யினையுடைய  பிற
பண்புப்     பெயர்களும்,      பிற      பெயர்களும்       அடியாக
வருவனவுமாயுள்ளதைக்   குறித்துக் கொள்ளப்படும்  எல்லாச் சொல்லும்
குறிப்பு வினைச்சொல்லாம், (எ - று.)   

அப்பால்   காலம் என்பது ஆகுபெயரால் காலமுடைய வினைச்சொல்
லினைக்   குறிப்பாய்த்  தோற்றும்  என்பான்  ‘குறிப்பொடு  தோன்றும்’
என்றாராகக் கொள்க.  

இனி,  அக்கூற்றுக்  காலங்  குறித்துக் கொள்ளப்படுமெனக் காலந்தன்
மேலதாயும் படும்.  

‘குறிப்பே  காலம்’  என்றது  முன்  குறிப்பொடு  தோன்றும   என்ற
காரணத்தான்  அச்   சொற்கட்குக்  குறிப்புவினை  யெனப்  பெயரிட்ட
வாறாகக் கொள்க.


1. இவ்வுரையாசிரியரும்     இளம்பூரணரும்   நீங்கலாக    ஏனைய
உரையாசிரியர்கள்     அனைவரும்    இதனை    இரு   நூற்பாவாகக்
கொண்டுள்ளார்கள்.