உண்ணூஉ எனவும், உண்குபு எனவும், உண்டென எனவும்; தின்னூஉ எனவும்; தின்குபு எனவும்; தின்றென எனவும்; புகூஉ, புகுபு, புக்கென எனவும்; ஓடூஉ, ஓடுபு, ஓட்டென எனவும்; தூஉ, தூபு, தூய் எனவும் வேறுபடாது வருதலுடைமையின் வேறுகூறினார் என்பது, செய்யூ என்பதற்குச் செய்யா என்பதூஉம் ஓர் வாய்பாடு. அதுவும் ஒன்றெனமுடித்தல் என்பதனாற் கொள்ளப்படும். இதனை இறந்தகால விரைவுப்பொருட்டு என்பாரும் உளர். செய்து என்பதற்குச் செய்யாநின்று என்பதூஉம் ஓர் நிகழ்கால வாய்பாடு. அதுவும் ஒன்றெனமுடித்தல் என்பதனால் கொள்ளப்படும். இனிச் செய்யியர் என்பது மழை பெய்யியர் எழுந்தது என்பது. செய்யிய என்பது மழை பெய்யிய எழுந்ததது என்பது. செயின் என்பது மழைபெய்யிற் குளம் நிறையும் என்பது. இது நிகழின் அது நிகழும் என்னுங் காரணப்பொருள் பற்றி வரும். இதற்கு மழைபெய்தாற் குளம் நிறையும் என ஆல் என்பதும் ஓர் வாய்பாடு. அதுவும் ஒன்றென முடித்தல் என்பதனாற்கொள்க. ‘நனவிற் புணர்ச்சி நடக்கலும்’ (கலி - 39 :35) என உம் ஈறாதலும் கொள்க. இதுவும் ஒன்றென முடித்தல் என்பதனாற்கொள்க. மழை பெய்தக்கால் என்பதோ எனின் அது பின்னோதுகின்ற கால் என்னும் வாய்பாடெனக் கொள்க. மழை பெய்யுமேலும் மழை பெய்யுமேனும் என வரும் ஏல் ஏன் என்பனவோ எனின் அவற்றையும் இதன் குறிப்பென்று கோடலும் ஒன்று. அன்றியும் இவ்வெச்சப் பொருள்படுவன சில இடைச் சொல்லென்று கோடலும் ஒன்று. ‘ஒன்றானும் தீச்சொல்’ (குறள் - 258) என்புழி ஆனோ எனின், அதுவும் அப்பால் ஓரிடைச் சொல் என்றலும் ஒன்று. ஆயினும் என்னுஞ் சொல் ஆனும் என இடைக்குறைந்து நின்றது என்றலும் ஒன்று. ‘நுணங்கிய கேள்வியரல்லால்’ (குறள் , 419) என்புழி அல்லால் என்பதோ எனின் அன்றி என்னுஞ் செய்தெனெச்சக் குறிப்பிற்கு அதுவுமோர் வாய்பாடு என்பது. அல்லாவாயினென்பது பொருளாக்கி இதன் குறிப்பு என்பாரும் உளர். இனிச் செய என்பது மழைபெய எழுந்தது என்பது. மழைபெய்யக்குளம் நிறைந்தது என இறந்த காலத்துக்கண்ணும் வரும். மழை பெய்யக் குளம்நிறையும் என நிகழ்காலத்துஞ் சிறுபான்மை வரும். இவ்வெச்சந்தான் ஒருவழி மழை பெயக் குளம் நிறைந்தது எனக் காரணப்பொருளாயும், குளம் நிறைய மழை பெய்ததெனக் காரியப் பொருளாயும், மழைபெய எழுந்ததென அதற் பொருட்டென்னும் |