சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

1

திருச்சிற்றம்பலம்

தொல்காப்பியம்

சொல்லதிகாரம்

கல்லாடனார் விருத்தியுரை

1. கிளவியாக்கம்

திணை இரண்டு எனல்
 

1.

உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனார் அவரல பிறவே

ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே
 

என்பது சூத்திரம்.

இவ்வதிகாரம்       என்னுதலியெடுத்துக்கொள்ளப்பட்டதோவெனின்,
அதிகார  நுதலியதூஉம்  அதிகாரத்தினது  பெயருரைப்பவே  விளங்கும்.
இவ்  வதிகாரம் என்ன  பெயர்த்தோவெனின்  சொல்லதிகாரம்  என்னும்
பெயர்த்து.  அஃது  இடுகுறியோ  காரணக்குறியோ   வெனின், காரணக்
குறி.  என்னை  காரணம்  எனின்,  சொல்லுணர்த்தினமை  காரணத்தின்
என்பது.  என்னை  கிளவியாக்கம்   எழுவாயாக,   எச்சவியலிறுதியாகக்
கிடந்த     ஒன்பது      ஓத்துக்களுள்ளும்      சொல்லின்கட்கிடந்த
விகற்பமெல்லாம் ஆராய்ந்தார் எனக்கொள்க.

அதிகாரம்     என்றதன்  பொருண்மை  என்னையெனின் முறைமை.
அவ் வோத்துக்களுள்ளும் எனைத்துவகையான் உணர்த்தினானோவெனின்
எட்டுவகைப்பட்ட     இலக்கணத்தான் உணர்த்தினான் என்பது. அவை
யுணரச் சொல்லுணர்ந்தானாம்.


1எழுவாயாக முதலாக.