சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

187

ஈண்டு   மயங்கியது எச்சொல்லோ எனின், நெருப்புச்சுடும் என்றவழி
சுட்டது,  சுடாநின்றது, சுடுவது என்று  மூன்றுகாலச்  சொல்லும் செய்யும்
என்பதனால்   சொல்லப்படுதலின்   அவை    மயங்கின   எனப்படும்.
இச்சுடுமென்ற சொற்றானும் தன் நிகழ்காலத்ததாய்  நிற்றலைவிட்டு  ஒரு
சொல்லுதற்கண்ணே   மூன்று   காலமும்   பட   நிற்றலின்   அதுவும்
மயங்கிற்று எனப்படும். இஃது ஒரு சொன்மயக்கம்.              (42)

விரைவுப்பொருளில் காலம் மயங்கல்
 

243. வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள என்மனார் புலவர்.
1
 

என்     -    எனின்,      வினைச்சொல்       எல்லாவற்றானும்
விரைவுப்பொருட்கண்  எதிர்காலமும் நிகழ்காலமும்   இறந்தகாலத்தொடு
மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) எதிர்காலத்தும்   நிகழ்காலத்தும்  ஒருபடியாக  வருகின்ற
வினைச்சொல்லாகிய  சொல்லின்   பொருண்மையை   இறந்த காலமாகக்
கருதிக்  கூறுதல் விரைவுப்  பொருண்மை  உடைய  என்று  சொல்லுவர்
புலவர், (எ - று.)

(எ - டு.)  ஒருவனை ஒருவன்   ஓர்   குறைபொருட்டால்  இன்னும்
உண்டிலையோ   போதாயோ    என்புழி,    உண்பேன்,   போதுவேன்
எனற்பாலதனை,     உண்டேன்    போந்தேன்     என்னும்.     இனி
உண்கின்றானைக்  கேட்பினும்  உண்ணாநின்றேன்  போதுவல் என்னாது
உண்டேன், போந்தேன் என்னும்.

இவை  அமைதற்குக்  காரணம்  செய்யாததனைச்  செய்தாக்கித் தன்
விரைவு  தோன்றக்  கூறும்  கருத்தினன்  ஆதலின்  என்பது.  இதுவும்
சொல்லொடு     சொன்மயக்கம்.      இஃது     எல்லாச்சொன்மேலும்
கொள்க.                                            (43)

சிறப்புப் பொருட்கண் காலம் மயங்கல்
 

244. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி
அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வ தில்வழி நிகழும் காலத்து
மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே.
 

1. ‘மலர்மிசை ஏகினான்’  என்னும்  திருக்குறளில் இந் நூற்பாவினை
இலக்கணமாக எடுத்துக்காட்டுவர் பரிமேலழகர்.