பொருட்கண் வருகின்ற வினாவினையுடைய வினைச்சொல், அவ்வாறு தான் அது செய்யாமை உணர்த்துதற்கு நின்ற நிலைமை எதிர்மறுத்துத் தான் அது செய்தானாக உடன்பட்டமை அவற்கு உணர்த்துதற்கு உரிமையினையும் உடைத்து, (எ - று.) (எ - டு.) கதத்தானாதல் களியானாதல் மயங்கி இன்னாங் குரைத்துப் பின் தெருண்டவழி, அவ்வின்னாங்கு உரைக்கப்பட்டான், ‘நீ என்னை வைதாய்’ என்றக்கால், ‘யான் வைதேனோ’ எனத் தான் வையாமையை வலியுறுத்தற்குக் கூறி அதுதானே ‘அப்பொழுது வைதேன் ; நோகாதே’ என்று நேர்ந்தமை பட நிற்கும் என்பது. உம்மை எதிர்மறையாகலான் மறுத்தல் பெரும்பான்மை; நேர்தல் சிறுபான்மையெனக் கொள்க. இவ்வாறு பொருளுணர்த்ததுகின்ற தொடர்க்கண் வினா விடைச் சொல்லாகலான் அஃதாண்டைக்காராய்ச்சி யன்றோ எனின், அச்சொல்லெடுப்பானே வைதேன் என்னும் உடன்பாட்டு வினைச்சொல் வைதேனோ என ஒருவழி வைதிலேன் என்னும் எதிர்மறைப் பொருள் பெரும்பான்மையும், ஒருவழி அம்மறைநிலையை விட்டுத் தன்னுடம்பாட்டுப் பொருண்மை சிறுபான்மையாயும் நின்றமையான் ஈண்டைக்கும் ஒரு வழூஉவமைதி ஆராய்ச்சித்தாயிற்று என்பது. (46) இயற்கையிலும் தெளிவிலும் காலம் மயங்கல் |