அவை யாவையெனின் இரண்டு திணைவகுத்து, அத்திணைக்கண் ஐந்துபால் வகுத்து, ஏழுவழு வகுத்து, எட்டுவேற்றுமை வகுத்து, ஆறு தொகை வகுத்து, மூன்று இடம் வகுத்து, மூன்று காலம் வகுத்து, இரண்டிடத்தான் ஆராய்ந்தானாம் என்பது. சொல்லிற்கிலக்கணமாமாறு என்னையோவெனின் 1இன்மைமுகத் தானும் உண்மை முகத்தானும் அமைந்த இலக்கணமாமென்றுணர்க. அவற்றுள் இரண்டு திணையாவன உயர்திணையும் அஃறிணையும் என இவை. ஐந்துபாலாவன ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென இவை. ஏழுவழு வாவன திணைவழூஉ, இடவமூஉ, காலவழூஉ, மரபு வழூஉ, செப்புவழூஉ, வினாவழூஉ என இவை. வேற்றுமை எட்டாவன எழூவாய்வேற்றுமை முதலாக விளி வேற்றுமையீறாகக் கிடந்த இவை. தொகையாறாவன வேற்றுமைத்தொகை, உவமத்தொகை வினைத் தொகை, பண்புதொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை யென இவை. மூன்றிடமாவன தன்மை, முன்னிலை, படர்க்கை என இவை. மூன்றுகால மாவன இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என இவை. இரண்டு இடமாவன வழக்குஞ் செய்யுளுமாகிய இவை. சொல்லிலக்கணங்கள் எட்டு என்றற்கு விதி உரையிற்கோடலென வுணர்க. இனிப். பிறவிலக்கணமுண்டெனினும், இவை பெரும்பான்மைய வென்றாதல், அவையும் இவற்றுள் அடங்குமென்றாதல் கொள்ளப்படும் என்க. மற்றுச் சொல்லென்றதற்குப் பொருண்மை என்னையெனின், ஓசை யென்றவாறு. ஆனால் கடலொலியும், காரொலியும், விண்ணொலியும் சொல்லாம் பிறவெனின், அற்றன்று, ஓசையெனினும், அரவமெனினும், இசையெனினும், ஒலியெனினும், எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்தல் லோசைக்கும் பொது. கிளவியெனினும், மாற்ற மெனினும், மொழி
1. இன்மைமுகத்தான் அமைந்த இலக்கணமாவது “வினையெனப் படுவது வேற்றுமைகொள்ளாது” என்றாற்போல மறைவகையான் வருவன. உண்மைமுகத்தான் அமைந்தவாவன “நினையுங் காலைக் காலமொடு தோன்றும்” “‘பெயரெனப் படுபவை..........தோன்றலாறே” என்றாற் போல விதிமுகத்தான் அமைந்தவை. |