சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

194

இடைச் சொற்களின் பாகுபாடு
 

252.

அவைதாம்,
புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதநவும்
வினைசெயல் மருங்கின் காலமொடு வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்
அசை நிலைக் கிளவி யாகி வருநவும்
இசை நிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்
ஒப்பில் வழியால் பொருள்செய் குநவுமென்(று)

அப்பண் பினவே நுவலுங் காலை.
 

என்  -    எனின்,   அவ்விடைச்   சொற்களின்   பாகுபாடாமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேல் இடைச்சொல்   என்று  சொல்லப்பட்டவை   தாம்
இருமொழி   தம்மிற்   புணர்தலியன்ற     நிலைமைக்கண்   அவற்றின்
பொருணிலைமைக்குதவிசெய்து   வருவனவும்,       வினைச்சொற்களை
முடிக்குமிடத்துக்  காலங்காட்டும் இடைச்சொற்களொடு     கூடித்  தாம்
பால்காட்டுஞ்    சொற்களாய்    வருவனவும்,      வேறுபாடு   செயத்
பொருண்மையிடத்து    வேற்றுமையுருபாய்   வருவனவும், வழக்கின்கண்
தமக்கு  ஓர்  பொருளின்றித்  தாம்    அடைந்த  பெயர்  வினைகளை
அசையப்பண்ணி   நிற்கும்   நிலைமையவாய்    வருவனவும்,   பெயர்
பொருளிடத்துப்    பொருளின்றி     ஓரோர்   அசையை   நிறைத்தற்
பொருண்மையவாய்  வருவனவும்,  பெயர்   வினைகள்போல  விளங்கப்
பொருளுணர்த்தாத  சொற்கள்  தத்தம்  குறிப்பானே   ஒரு  பொருளை
உணர்த்தி  வருவனவும்,  ஒத்த  என்னும்  வாய்பாடு தன்கண்  நில்லாத
கூற்றானே  நின்ற ஒப்புமைப் பொருண்மையை   உணர்த்தி் வருவனவும்
என்று    சொல்லப்பட்ட      அவ்விலக்கணங்களை    உடையனவாம்,
அவற்றைச் சொல்லுங்காலத்து, (எ - று.)

புணர்ச்சிக்கண்    வருவன   எழுத்தோத்தினுள்    ‘இன்னேவற்றே’
யென்னும் சூத்திரத்தான் ஓதப்பட்டன.

இனித்  தன்னினமுடித்தல்  என்பதனான் காரம், கரம், கான் என்னும்
எழுத்துச் சாரியையுங் கொள்ளப்படும்.