சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

198

‘உம்’ என்னுஞ் சொல்
 

257. எச்சஞ் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்(று)

அப்பா லெட்டே உம்மைச் சொல்லே.
 

என் - எனின், இதுவும் அது.

(இ - ள்.)  எச்சத்தின்கணண்தும்,            சிறப்பின்கண்ணதும்,
ஐயத்தின்கண்ணதும்,   எதிர்மறைக்கண்ணதும்,   முற்றின்  கண்ணதும்,
எண்ணின்கண்ணதும், தெரிநிலைக்கண்ணதும்,  ஆக்கத்தின்  கண்ணதும்
என அக்கூறு எட்டாம் ‘உம்’ என்னுஞ்சொல்,(எ - று.)

எச்சம் இறந்தது தழீஇயதும், எதிரது தழீஇயதும் என   இருவகைத்து.
அவையாவன:-  யான்  கருவூர்க்குச்  செல்வேன்    என்றாற்கு யானும்
அவ்வூர்க்குப்  போதுவல்  என்பதும்,  அவ்வாறு கூறினார்க்கு  யானும்
உறையூர்க்குப் போதுவன் என்பதூஉம் என இவை.

இனிச்சிறப்பு  -   உயர்வுச்  சிறப்பும்,  இழிவுச்சிறப்பும்  என  இரு
வகைத்து.

உயர்வு   -  தேவர்க்கும்   வேம்பு  கைக்கும்  என்பது;  ஊர்க்கும்
அணித்தே பொய்கை என்பதும் அது.

இழிபு - அவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது எனவரும்.

ஐயம் -  பத்தும் எட்டும் உள என்பது.

எதிர்மறை     -  கொற்றன்   வருதற்கும்    உரியன்   என்பது.
இவ்வெதிர்மறை  “அஃறிணை   விரவுப்பெய ரியல்புமா ருளவே” எனப்
பண்பு பற்றியும் வரும்.

எச்சத்தோடு    இதனிடை    வேற்றுமை  யென்னையெனின்,  அது
பிறிதோர்  பொருளினைத்  தழுவும்,  இஃது   அப்பொருட்டானும்  ஒரு
கூற்றைத் தழுவும் என்பது.

இனிமுற்று - தமிழ்நாட்டு  மூவேந்தரும்  வந்தார்  என்பது.  யாது
மூரே, நாளுமன்னான், புகழுமன்னை என்பனவும் முற்றும்மை.

இனி   எண்  -  நிலனு நீருந்  தீயும்  வளியும்  ஆகாயமுமெனப்
பூதமைந்து என்பது.

இனித் தெரிநிலை -  நன்றுமன்று  தீது  மன்று,   என்பது “இடை
நிகர்த்தது”  என்றோர் பொருண்மை தெரிவித்து நிற்றலால்   தெரிநிலை
என்றாயிற்று.