பாலவெனின் ஆகா. என்னை? நான்கு வகைப்பட்ட சொல்லிற்குப் பொதுவிலக்கணம் இவ்வோத்தினுள் உணர்த்தினார். அவற்றுள் முதற்கண்ணது பெயர்ச்சொல்லாதற்கு இலக்கணம் வேற்றுமையோத்துள்ளும், வேற்றுமைமயங்கியலுள்ளும், விளிமரபினுள்ளு முணர்த்தினார். உணர்த்தி, அதன்பின்னே கிடந்தவினையை வினையியலுள் உணர்த்தினார். உணர்த்தி, அதன் பின்னே கிடந்த இடைச்சொல்லை இடைச்சொல்லோத்தினுள் உணர்த்தினார். உணர்த்தி, அதன் பின்னே கிடந்த உரிச்சொல்லை உரிச்சொல்லோத்தினுள் உணர்த்தினார். பின்னை எல்லா வோத்தினுள்ளும் எஞ்சி நின்ற சொற்களை எச்சவியலுள் உணத்தினார். இவ் வகையான் எல்லாம் உணர்த்தினாராகலின் இவ்வோத்தெல்லாம் வேண்டிய தூஉம், இம்முறையே கிடந்ததூஉமாயிற்று. இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோவெனின் சொல்லும் பொருளும் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இனி, (இ - ள்) உயர்திணை யென்மனார் மக்கட்சுட்டே என்பது உணர்திணையென்று சொல்லுப ஆசிரியர் மக்களாகிய நன்கு மதிக்கப்படும் பொருளை என்றவாறு. அஃறிணை யென்மனார் அவரல பிறவே என்பது அஃறிணையென்று சொல்லுப ஆசிரியர் அவரினீங்கிய அல்லவாகிய பிறபொருளை என்றவாறு, ஆயிருதிணையின் இசைக்குமன சொல்லே என்பது அவ்விரண்டு பொருளையும் உணர்த்துஞ் சொற்கள் என்றவாறு. எனவே உயர்திணைச்சொல்லும் உயர்திணைப்பொருளும், அஃறிணைச் சொல்லும் அஃறிணைப் பொருளும் எனச் சொல்லும் பொருளு மடங்கி. உயர் என்னும் சொல்லின் முன்னர்த் திணை என்னுஞ் சொல்வந்து இயைந்தவாறு யாதோவெனின், ஒருசொல்முன் ஒருசொல் வருங்கால் தொகைநிலை வகையான் வருதலும், எண்ணுநிலை வகையான் வருதலும், பயனிலை வகையான் வருதலுமென இம் மூன்று வகையல்லதில்லை. இதற்கு விதி உரையிற்கோடல் என்னுந் தந்திரவுத்தி. அவற்றுள் தொகைநிலை வகையான் வந்தது யானைக்கோடென்பது எண்ணுநிலை வகையான் வந்தது நிலனுநீருமென்பது, பயனிலை வகையான் வந்தது சாத்தனுண்டான் என்பது. மற்று எச்சவகை அடுக்குவகை பொருள்கோள்வகை ஆக்கவகை இடைச் சொல்வகை உரிச்சொல்வகை யென்றாற்போலப் பிறவும் வகையுளவெனின், நால்வகைச் சொல்லினும் சிறப்புடைய பெயரினையும், வினையிற் சிறப்புடைய முற்றுச் சொல்லினையும்பற்றி, வழக்கிடத்தும் பெரும்பான்மையும் வருவன அவையேயாகலின் அம்மூன்றல்லது இல்லையென்றார் போலும். |