அவையாவன:- எச்சவகை: உண்டுவந்தான், உண்டசாத்தான் என்றாற் போல்வன. அடுக்கு வகை: பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ என்றாற்போல்வன. பொருள்கோள்வகை : சுரையாழ அம்மிமிதப்ப என்றாற்போல்வன. ஆக்க வகை: சாத்தான் தலைவனாயினான் என்றாற்போல்வன. இடைச்சொல்வகை: ‘யானோ தஞ்சம் பெரும’ என்றாற்போல்வன. உரிச்சொல்வகை ‘செய்யார் தேஎந் தோமரல் கலிப்ப‘ என்பன. அவற்றும் இதுதொகைநிலை வகையான் வந்தது. தொகைநிலைவகை யாறனுள்ளும் வினைத்தொகை. வினைத்தொகை மூன்றனுள்ளும் இறந்தகால வினைத்தொகை. என்மனார் என்றது என்பவென்றும் முற்றுச் சொல்லினைக் ‘குறைக்கும் வழி குறைத்தல்’ என்பதனால் பகரங் குறைந்து, ‘விரிக்கும் வழி விரித்தல்’ என்பதனான் மன்னும் ஆரும் என்பன இரண்டு இடைச் சொற்பெய்து விரிந்து என்மனாரென்றாராயிற்று. இம் முற்றுச் சொற்கும், பெயராகிய ஆசிரியரென்பது செய்யுள் விகாரத்தாற் றொக்கது; இஃதெச்சவகை. என்றாரெனற்பாலதனைக் காலமயக்கத்தால் என்மனார் என்றாரென உணர்க. இனி, உயர்திணை யென்பதற்குமுன் என்ப என்னும் சொல் முதனூலாசிரியனது கூற்றினைப் பின், தான் கூறுகிற மக்கட்சுட்டென்பதனோடு இயைவித்தற்குக் கொண்டு கூறு நிலைமைக்கண் வந்ததாகலின் உயர்திணை யென்னுஞ் சொல்லும். என்ப என்னுஞ் சொல்லும், பின்வருகிற “மக்கட் சுட்டு” என்னுஞ் சொல்லினோடு வேற்றுமைத் தொகையுள் இறுதியுருபுத் தொகைநிலை வகையான் வந்ததென்ப. பொருளியைபு கூறுவதல்லது தம்முட் சொல்லியைபு இலவென வுணர்க. மக்கட் சுட்டென்பது மக்களாகிய சுட்டு; என்பதன் பொருள் நன்கு மதிப்பு. அஃதாகுபெயரான் மக்கண்மேனின்றது. மக்களென்னாது சுட்டென்றது தான் உயர்திணையென இடுகின்ற குறியீட்டிற்குக் காரணம் இதுவென்பது விளக்கல்வேண்டிப்போலும். இனி, ஆசிரியரென்பதனோடு மக்கட்சுட்டு என்பதூஉம் பொருளியை பல்லது சொல்லியைபு இன்றென வுணர்க. ஏ என்பது ஈற்றசை. அஃறிணை என்பது அல்லாததாகிய திணையெனக் குணப்பபண்புபற்றி வந்த பண்புத்தொகை. உயர்திணை யல்லாததாகியதென மேனின்ற உயர்திணை என்னுஞ் சொல் வருவித்துக் கொள்க. உயர்திணை யென்பதற்கு ஏற்ப, இழிதிணையென்று இல் என்னும் பொருணோக்கம்; என உணர்க. முன்னின்ற சுட்டென்பதன் முன் அஃறிணை யெனவந்த சொல்லும் சூத்திரத்துட் பொருட்படை யென்னும் வினைமுடிவினிறுதிக்கண் வந்ததாகலின் பொருளியைபல்லது சொல்லியைபின்றென உணர்க, |