சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

13

தின்றல் இவை  முதலாகிய  தொழில்  தொறும்  -  உண்குவ,  தின்குவ
என   எதிர்காலம்   பற்றி   வேறோர்   வாய்ப்பாட்டான்   வருதலான்
அவ்வகரத்தோடு  அடங்கா  நிலைமைச் சிறப்புடைய  அகரத்தை  முன்
கூறி   இதனை  அதன்பின்  வைத்தார்  என்பது.   இக்கடா   ஈற்றிற்கு
மொக்கும்.

பலவறிச்சொல்      என்னும்    எழுவாய்க்கு    இறுதி    என்பது
பயனிலையாக்கின்  அப்பால்   மூன்று   என்பது  நின்று வற்றுமாகலின்,
மூன்று    என்பதையே    பயனிலையாக்கி     இறுதி     என்பதனை
இறுதியையுடைய மூன்று எனப் பயனிலைக்கு அடையாக்கி உரைக்க.  (9)

இப்பதினோ ரீறுகளும் வினைக்கண் வரும்பொழுது
பால் விளங்கும் எனல்
 

10.
  

இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய
ஈற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும்
தோற்றந் தாமே வினையொடு வருமே.

 

என் - எனின்  மேல்,    பாலுணர்த்தும்   என்னப்பட்ட    எழுத்து
இனைத்   தென்பதூஉம்,    அவை    வீனைக்கண்ணின்   றுணர்த்தும்
என்பதூஉம்,  வினைக்கண்ணும்   ஈற்றினின்   றுணர்த்தும்  என்பதூஉம்
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) இரண்டு திணையிடத்தும் உளவாகிய  ஐந்து  பாலினையும்
அறியும்படி      மொழியது      ஈற்றுக்கண்ணே      நின்றுணர்த்தும்
மேற்சொல்லப்பட்ட   பதினொரு  வகை   யெழுத்தும்  ;   அவைதாம்
பாலுணர்த்துதற்குப்   புலப்படுமிடத்து    வினைச்சொல்லோடு    வந்து
புலப்படும், (எ - று.)

பதினோரெழுத்துமாவன     னஃகானொற்றும்,     ளஃகானொற்றும்,
ரஃகானொற்றும்,   பகரமும்,   மாரும்,   துவ்வும்,   றுவ்வும்,  டுவ்வும்,
அவ்வும்,  ஆவும், வவ்வும் என இவை.  இசைக்கும்  என்பது  செய்யும்
என்னும்   முற்றுச்   சொல்   பெயரெச்சமாக   உணர்த்தும்   என்னும்
பொருள்படும்.

மேற்கூறிய     திணையினையும், பாலினையும்  ஈண்டு  வரையறுத்து
“இரு   திணை   மருங்கின்   ஐம்பால்”   எனக்   கூறிய    காரணம்
என்னையெனில், உயர் திணைப் பொருள்  தேவரும்,  நரகரும்  எனவும்
உயர்திணைப்பாலுள்   பேடியும்    அலியுமென   விரிந்து  நின்றனவும்
பொருள்களுண்மையின் இவ் பொருட்பகுதி யெல்லாஞ்  சொற்பகுதி  பிற
இன்மையின்   ஐந்தாய்    அடங்கினவே    யெனினும்    அப்பொருட்
பாகுபாடுபற்றி  நூலகத்து வேறுதிணையும்  பாலுமாக  விளங்கவுங் கூடும்
கொல்லோ  என்று மாணாக்கன் ஐயுறுவானாயினும்  என்று  ‘இவையல்ல
தில்லை’   என  ‘விரித்துத்  தொகுத்தல்’   என்னும்   இலக்கணத்தான்
வரையறுத்து. “இருதிணை யைம்பால்” என்றாராகக் கொள்க.