பதிப்புரை நஞ்செந்தமிழ் முதுமொழியினமைந்த இலக்கணங்களிற் பழமையானது தொல்காப்பியம் ஒன்றே. இச்சீரிய தொல்காப்பியத்துக்கு உரை கண்டவர் எத்துணையர் என்பதை யாரறிவார் ? ஏட்டில் வரைந்து சுவடிகளாக அடுக்கிப் போற்றிக் கற்றுவந்த காலம் அது. அச்சுப்பொறி வந்த பின்னர் அறிஞர் கையகப்பட்ட உரைகளே வெளிவந்தன. இஞ்ஞான்று தொல்காப்பிய வுரையெனத் தோன்றி அச்சிற் பதித்து வெளியிடப்பட்டவை இளம்பூரணம், நச்சினார்க்கினியம், சேனாவரையம், பேராசிரியம், தெய்வச்சிலையம், கல்லாடம் என்பவையே. இவற்றில் இளம்பூரணமே பழமையானது; நூல் முழுவதுக்கும் எழுதப்பட்டது; சிதையாமற் கிடைத்துள்ளது. நச்சினார்க்கியனார் உரை எழுத்து, சொல், பொருளில் முன்னுள்ள ஐந்து (அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள்) இயல்கள் ஆகிய பகுதிக்கே கிடைத்துள்ளது. எஞ்சிய பொருட்பகுதியாகிய நான்கு (மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு) இயல்கட்குப் பேராசிரியருரையே கிடைத்ததுள்ளது. பேராசிரியர் இந்நான்கியல்களுக்குமட்டும் உரைவரைந்து மற்றைப் பகுதிகட்கு உரைவரையாது விடுப்பாரோ? நமக்குக் கிடைத்திலது என்றுதான் எண்ண வேண்டும். நச்சினார்க்கினியமும் பேராசிரியமும் இயைந்து ஓருரையாகத் தொல்காப்பிய முழுமைக்கும் அமைந்துள்ளது. இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம் என்ற வுரைகன் இங்ஙனம் நிற்க சேனாவரையம், தெய்வச்சிலையம், கல்லாடம் என்ற வுரைகள் காலும் தலையும் இன்றி நடுவடிவு அமைந்ததுபோல நடுநின்ற சொல்லதிகாரத்திற்கே யுரியவுரைப்பகுதிகள் மட்டுங் கிடைத்துள்ளன. ஒருநூலுக்கு உரைவரையும் உரையாசிரியர் முன்னும் பின்னும் விடுத்து நடுப்பகுதிக்குமட்டும் வரைவரோ ? வரையார். வரைந்து பின்னர் மறைந்திருத்தல் வேண்டும் என்றே நாம் எண்ணவேண்டும். சிறந்த பகுதி எனச் சொல்லதிகாரத்தை யெடுத்துக் கொண்டார் எனச் சிலர் கூறுவர். பொருளதிகாரம் செய்யுளியலுக்கு நச்சினார்க்கினியரும் உரைவரைந்துள்ளார். முன்னர் அது மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் வெளியிடப் பெற்றுள்ளது. அதனையும் வித்துவான் சைவப்புலவர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் செப்பஞ்செய்து எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் அச்சிடுகின்றோம். தொல்காப்பியத்திற்குரிய வுரைகள் எல்லாவற்றையும் திருத்திப் புதுக்கி வெளியிட்டுப் பலரும் இலக்கண நூலறிவு பெறுமாறு செய்வதுடன் உரை வேறுபாடும் ஒற்றுமையும் புலவர் அறிந்து |