சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

5

வித்துவான்  வகுப்பு,   புலவர்   வகுப்பு,   மாணவர்கட்குக்   கற்பிக்கு
முறைக்குத்  துணைசெய்ய   வேண்டும்  என்பது  கழகத்தின்  நோக்கம்.
அதற்கியைந்த   முறையில்   தொல்காப்பிய   வுரைகளைத்   தனித்தனி
பிரித்து எழுத்ததிகாரம்  இளம்பூரணம்,  சொல்லாதிகாரம்  இளம்பூரணம், பொருளதிகாரம்   இயம்பூரணம்;   எழுத்ததிகாரம்   நச்சினார்க்கினியம்,
சொல்லதிகாரம்  நச்சினார்க்கினியம்  இவைபோன்ற பெயரிட்டு முறையே
ஒவ்வொன்றாக   வெளியிட்டு    வந்தது   வருகின்றது.  அம்முறையில்
இந்நாள்   வெளிவருகின்றது    சொல்லதிகாரம்   கல்லாடம்   என்பது.
அக்கால்லாடருரையுடன்    பின்னிணைப்பாகப்   பழையவுரையொன்றும்
இணைக்கப்பட்டுள்ளது.   அப்பழையவுரை   சொல்லதிகாரத்தின்  முதல்
மூன்றியல்கட்கே  கிடைத்துள்ளது.   அதிலும்  வேற்றுமை  மயங்கியலில்
உள்ள  இறுதிநூற்பா   இரண்டுக்கும்   உரை  கிடைத்திலது.  கல்லாடர்
உரையும் உரியியலுக்கு மட்டும் இல்லை.

இக்கல்லாடனார்     உரையையும்    பின்னிணைத்துள்ள    பழைய
வுரையையும்  பிழையறத்திருத்தியும்   புதுக்கியும்   தந்துவர்   பண்டித,
வித்துவான்,  சைவப்   புலவர்,  சித்தாந்த   நன்மணி கு.  சுந்தரமூர்த்தி
யவர்களாவர்.   கல்லாடனார்    உரைக்குமுன்   ஆராய்ச்சி   யுரையும்
பழையவுரைக்குமுன்     ஆராய்ச்சி    யுரையும்    வரைந்துதவியவரும்
அப்பேராசிரியரே      யாவர்.       ஆராய்ச்சியுரையில்      மற்றை
யுரைகளினியல்பும்,      ஒற்றுமையும்     வேற்றுமையும்,     இயைபும்
இயைபின்மையும் எடுத்துக்காட்டி  விளக்கியிருப்பது  மிகவும்  பாராட்டத்
தக்கதாம்.

கல்லாடனார்   உரையும்  பெயர்தோன்றாத பழையவுரையும் இயைந்த
தொல்காப்பியம்     சொல்லதிகாரம்      இந்நாள்      கழகவாயிலாக
வெளியேறுகின்றது.  இந்நாள்காறும்   வெளிவந்துலவாத  புதுமை   நூல்
இது.    சொல்லதிகாரத்திற்குரிய    இளம்பூரணம்,   நச்சினார்க்கினியம்,
சேனாவரையம்,      தெய்வச்சிலையும்      என்னும்    உரைகளோடு
ஒப்புநோக்குதற்கும்    உயர்வு   காண்பதற்கும்    இந்நூல்   பெரிதும்
துணைபுரியும்  என்பது  ஒருதலை.  மாணவர்   ஆசிரியர்   தமிழன்பர்
பலரும்  வாங்கி  வாங்குவித்துக்  கற்றுக்   கற்பித்து   இலக்கணக்கலை
முன்னேற்றங் காண்க.

                     சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.