சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

37

இவை யென்பது   பயறே  யெனினும் பயறென்பது பின்னுண்மையின்
தன்மேற்     செல்லாது    பிறிதொன்றனைச்      சொல்லியதுபோலும்
நோக்குடைத்தே யெனினும் அமைக, (எ - று.)

இதனாற்  சொல்லியது ஒருபொருண்மேல் இருபெயரும் பல பெயருங்
கூறுதல்  இலக்கணமே   யெனினும்   இயைபுபடக்  கூறவேண்டுமென்று
அவ்வழி     இயைபில்லது      கண்டு     அம்     மரபுவழுவினை
அமைத்தவாறாயிற்று.                                      (37)

இயற்பெயரும் சுட்டுப்பெயரும் ஒருங்குவரின் அவற்றைச்
சொல்லும் முறைமை

   

38.

இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் [கிளவியும்
வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றின்
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்.
 

என்  -   எனின்    இதுவும்   ஒரு   பொருண்மேல்   இருபெயர்
வழுக்காத்தல் நுதலிற்று.

(இ  - ள்.) இயற்பெயராகிய சொல்லும், சுட்டுப்பெயராகிய சொல்லும்,
வினைச்சொற்கண்ணே   கூடவருங்   காலந்    தோன்றின்   அவற்றுட்
சுட்டுப்பெயர்க்கிளவியை முற்படச் சொல்லார்; இயற்  பெயருக்குப்  பின்
வைத்துச் சொல்லுக என்று சொல்லுவர் ஆசிரியர், (எ - று.)

(எ - டு.)  சாத்தன்  வந்தான்  அவற்குச்  சோறு கொடுக்க; கொற்றி
வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க என்றாற்போல்வன.

தன்னின  முடித்தல்  என்பதனானே  விரவுப்பெயர்களின்  இயற்பெய
ரொழிந்தனவுங் கொள்ளப்படும்.

(எ - டு.)  முடவன்  வந்தான்  அவற்குச்  சோறுகொடுக்க என்றாற்
போல்வன.

இயற்பெயர்  வழிய  என்ற  மிகையான்,  உயர்திணைப்  பெயர்க்கும்
அஃறிணைப்பெயர்க்குஞ்    சுட்டுப்பெயர்    பிற்    கூறுக    என்பது
கொள்ளப்படும்.

(எ - டு.)  நம்பிவந்தான்  அவற்குச் சோறு கொடுக்க; எருது வந்தது
அதற்குப் புல் இடுக எனவரும்.

ஒருங்கியலும்  என்ற  மிகையான்  இம்மூவகைப் பெயர்க்குஞ் சுட்டுப்
பெயர் கூறும்வழி அகரச்சுட்டே கிளக்க என்பது கொள்ளப்படும்.